இந்திய சந்தையில் தனது நிலையை வலுப்படுத்த, ஹோண்டா 2030-க்குள் 10 புதிய வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதில் எஸ்யூவி மாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும்.
இந்திய கார் சந்தையில் ஹோண்டா மீண்டும் பெரிய ஆட்டம் போட தயாராகி வருகிறது. மாருதி, ஹூண்டாய் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு போட்டியாக, ஹோண்டா வரும் ஆண்டுகளில் பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளது. குறிப்பாக செடான் மற்றும் எஸ்யூவி பிரிவுகளில் ஹோண்டாவின் அடுத்தடுத்த அப்டேட்கள், போட்டியாளர்களுக்கு தூக்கமில்லா இரவுகளை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2030-க்குள் இந்திய சந்தையில் மொத்தம் 10 புதிய வாகனங்களை அறிமுகப்படுத்திய ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இதில் 7 மாடல்கள் எஸ்யூவி பிரிவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மேலாக, சில குளோபல் மாடல்கள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களையும் (EV) இந்தியாவிற்கு கொண்டு வர ஹோண்டா முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, 2026-ல் ஹோண்டாவின் இரண்டு பிரபல வாகனங்கள் முக்கிய அப்டேட்டை பெறவுள்ளன.
அதில் முதலாவதாக, பல ஆண்டுகளாக இந்திய செடான் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹோண்டா City. தற்போது ஐந்தாம் தலைமுறையில் உள்ள இந்த கார், 2026-ல் இரண்டாவது மிட்-லைஃப் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டை பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய மாடல், ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா ஸ்லாவியா, வோல்க்ஸ்வேகன் விர்டாஸ் போன்ற கார்களுடன் தொடர்ந்து போட்டியிடுகிறது.
வடிவமைப்பில், புதிய ஹோண்டா சிட்டி-க்கு புதிய கிரில், அப்டேட் செய்யப்பட்ட முன் மற்றும் பின்புற பாம்பர்கள், புதிய LED ஹெட்லைட்கள் மற்றும் டெயில் லேம்ப்கள் சேர்க்கப்படலாம். இன்டீரியர் பகுதியில் பெரிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படவில்லை. இன்ஜின் விஷயத்தில், தற்போதுள்ள 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரெட்டெட் பெட்ரோல் இன்ஜினும், e:HEV ஹைபிரிட் ஆப்ஷனும் தொடரும் என கூறப்படுகிறது.
மற்றொரு முக்கிய அப்டேட் பெறவிருக்கும் மாடல் ஹோண்டா Elevate. 2023-ல் அறிமுகமான இந்த எஸ்யூவி, 2026-ல் ஃபேஸ்லிஃப்ட் மாடலைப் பெறும் முதல் ஹோண்டா எஸ்யூவி ஆக இருக்கும். வெளிப்புறத்தில் சிறிய வடிவமைப்பு மாற்றங்கள், உட்புறத்தில் சில புதிய அம்சங்கள் சேர்க்கப்படலாம்.
எலிவேட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், தற்போதுள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (121 bhp, 145 Nm) தொடரும். அளவுகளில் மாற்றமில்லை என்றாலும், புதிய நிற விருப்பங்கள் சேர்க்கப்படும் வாய்ப்பு உள்ளது. இந்த அப்டேட்கள் மூலம், ஹோண்டா இந்திய சந்தையில் மீண்டும் வலுவான போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


