பொலேரோவை தானியங்கி காராக மாற்றிய ஸ்டார்ட்அப் நிறுவனம்! வைரலாகும் ஆனந்த் மஹிந்திராவின் ரியாக்ஷன்!
வீடியோவை பகிர்ந்து கருத்து கூறியுள்ள ஆனந்த் மஹிந்திரா, "இந்தியா முழுவதும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அதிகரித்து வருவதற்கான சான்று இது" என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகளவில் வாகனத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தானியங்கி கார்கள் வரை வந்துள்ளது. இந்தியாவில், லெவல்-2 ADAS போன்ற மேம்பட்ட அம்சங்களுடன் சில கார் மாடல்கள் ஏற்கனவே வந்துள்ளன. ஆனால் சமீபத்தில், போபாலில் இருந்து ஒரு ஸ்டார்ட்அப் தனது புதிய கண்டுபிடிப்பால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதை மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவும் கவனித்துள்ளார். அவர் ஒரு பொலிரோ எஸ்யூவியின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் உள்ள காரில் செல்ஃப் டிரைவிங் தொழில்நுட்பம் இருப்பது குறித்தும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் பொலேரோ எஸ்யூவி டிரைவர் யாரும் இயக்காமமே தானாக பிஸியான தெருக்களில் சீராகச் செல்கிறது. இதை சஞ்சீவ் ஷர்மா என்பவர் மாற்றியமைத்துள்ளார். அவர் 2009 முதல் ஸ்டார்ட்அப் தொழில்நுட்பத்தில் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்.
வீடியோவில், ஒரு வெள்ளை நிற பொலேரோ எஸ்யூவியில் ஓட்டுநர் இல்லாமல் தானாகவே இயங்குவதற்கான ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் பொருத்தப்பட்டுள்ளது. LiDAR சென்சார்கள், கேமராக்கள், ரேடார் அமைப்புகள் மற்றும் சக்திவாய்ந்த சென்ட்ரல் கன்ரோல் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கிறது.
இந்த பொலிரோ எஸ்யூவி தனது ஸ்மார்ட் செல்ஃப் டிரைவிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு தடைகள் மற்றும் பிற வாகனங்களை எதிர்கொண்டு சீராக சாலையில் செல்வதை வீடியோ காட்டுகிறது. ஒரு கிராமப்புறப் பகுதியில் உள்ள பல திருப்பங்களில் திறமையாகச் செல்கிறது. சாலையில் இருக்கும் போலீஸ் தடுப்புகளைக் கூட பாதுகாப்பாகக் கடந்து செல்கிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வீடியோவை பகிர்ந்து கருத்து கூறியுள்ள ஆனந்த் மஹிந்திரா, "இந்தியா முழுவதும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அதிகரித்து வருவதற்கான சான்று இது" என்று குறிப்பிட்டுள்ளார்.