எலெக்ட்ரிக் கார்கள் மார்கெட்டை காலி செய்ய வரும் ஹைபிரிட் கார்கள்... என்ன காரணம் தெரியுமா?
வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்கலாம் என்ற நோக்கில் தான் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை கார் பிரியர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது. இப்போது அந்த இடத்தை ஹைபிரிட் கார்கள் பிடிக்க முயல்கின்றன.
இந்திய கார் சந்தையில் எலெக்ட்ரிக் கார்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. பல நிறுவனங்கள் அடுத்தடுத்து எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்து வருகின்றன. எஸ்யூவி கார்களில் எலெக்ட்ரிக் கார்களுடன், ஹைபிரிட் கார்களும் விற்பனைக்கு வர் தொடங்கியுள்ளன. பெட்ரோல் அல்லது டீசல் மூலமும், மின்சாரம் மூலம் இயங்கும் திறன் படைத்த இந்தக் கார்கள் எலெக்ட்ரிக் கார் சந்தையின் வளர்ச்சிக்கே சவாலாக மாறி வருகிறது.
மாருதி சுசுகி, டோயோட்டா மோட்டார் ஆகிய நிறுவனங்கள் ஹைபிரிட் எஸ்யூவி கார்களை விற்பனை செய்து வருகின்றன. 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் மொத்த கார் விற்பனையில் ஹைபிரிட் கார்கள் 2.48% உள்ளன. மின்சார கார்கள் 2.63% உள்ளன.
கிட்டத்தட்ட மின்சார கார்களின் விற்பனைக்கு இணையாக ஹைபிரிட் கார்களும் வாங்கப்பட்டுள்ளன. ஹூண்டாய், கியா மற்ற நிறுவனங்களும் ஹைபிரிட் கார்களைத் தயாரிப்பதில் களமிறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. அனைத்து நிறுவனங்களும் ஹைபிரிட் கார்களில் கவனம் செலுத்தினால், இந்த ஆண்டிலேயே ஹைபிரிட் கார்கள் விற்பனை எலக்ட்ரிக் கார்களைவிட அதிகமாகலாம் என்று கூறப்படுகிறது.
இப்போது இந்தியாவில் மாருதி சுசுகி, டோயோட்டா, ஹோண்டா மோட்டார் நிறுவனங்கள் மட்டுமே ஹைபிரிட் கார்களை விற்பனை செய்கின்றன. இவற்றில் எலெக்ட்ரிக் மோட்டாருடன் எரிவாயு எஞ்சினும் இருக்கும்.
வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்கலாம் என்ற நோக்கில் தான் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை கார் பிரியர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது. இப்போது அந்த இடத்தை ஹைபிரிட் கார்கள் பிடிக்க முயல்கின்றன. எலெக்ட்ரிக் கார் வாங்கியவர்கள் பெரிய நகரங்களுக்கு வெளியே நீண்ட தூரம் பயணம் செய்யும்போது, பேட்டரி ரீசார்ஜ் செய்வதில் பிரச்சினை ஏற்படுகிறது. பெருநகரப் பகுதிக்கு வெளியே போதிய அளவு ரீசார்ஜ் ஹப் இல்லை.
எனவேதான், எலெக்ட்ரிக் மோட்டாருடன் எரிவாயு என்ஜினும் இருக்கும் ஹைபிரிட் கார்களை நோக்கி வாடிக்கையாளர்கள் நகரத் தொடங்கியுள்ளனர். ஹைபிரிட் கார் இருந்தால் தொலைதூரப் பயணத்தின்போது எரிவாயு என்ஜின் மூலம் காரை ஓட்டிச் செல்லமுடியும். அதேநேரம் நகர்பகுதியில் குறுகிய தொலைவு பயணிக்க எலக்ட்ரிக் பேட்டரியை பயன்படுத்தி காரை இயக்கலாம்.
இந்த ஹைபிரிட் கார்கள் தயாரிப்பில் ஜப்பானிய நிறுவனமான டோயோட்டா டாப்பாக இருக்கிறது. செல்ஃப் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்ட ஹைபிரிட் கார்களைக் கொண்டுவந்துள்ளது. இந்த வகை கார்களில் எலெக்ட்ரிக் மோட் மற்றும் எரிவாயு மோட் இரண்டையும் ஒரே நேரத்திலும் இயங்க வைக்கலாம். தனித்தனியாகவும் இயங்கச் செய்யலாம். ஸ்ட்ராங் ஹைபிரிட் என்று அழைக்கப்படும் இந்த ரக கார்கள் 40 முதல் 50 சதவீதம் எரிபொருளையும் சேமிக்கின்றன. சுற்றுச்சூழலை மாசுபாடுத்தும் கார்பன் உமிழ்வையும் குறைக்கின்றன என டோயோட்டா கூறுகிறது.