விரைவில் ரிலீஸ் ஆகும் தரமான எலக்ட்ரிக் ஆட்டோ! EV மார்க்கெட்டில் கெத்து காட்டும் பஜாஜ்!
ராஜீவ் பஜாஜ் அளித்துள்ள பேட்டியில், "மூன்று சக்கர வாகன உற்பத்தியில் பஜாஜ் ஆட்டோதான் உலகிலேயே முதலிடத்தில் உள்ளது. தற்போது சந்தையில் 88 சதவீதம் பஜாஜ் வசம் உள்ளது" என்று ராஜீவ் பஜாஜ் கூறினார்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவின் விரைவில் எலக்ட்ரிக் ஆட்டோவை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. தற்போது சந்தையில் உள்ள ஆட்டோக்களுக்கு நிகராக தரமான வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் பஜாஜ் ஆட்டோவின் எம்.டி. ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராஜீவ் பஜாஜ் அளித்துள்ள பேட்டியில், "மூன்று சக்கர வாகன உற்பத்தியில் பஜாஜ் ஆட்டோதான் உலகிலேயே முதலிடத்தில் உள்ளது. தற்போது சந்தையில் 88 சதவீதம் பஜாஜ் வசம் உள்ளது" என்று ராஜீவ் பஜாஜ் கூறினார். மேலும், உலகமே பசுமையை நோக்கி சென்றுகொண்டிருப்பதால், தங்களது நிறுவனமும் மின்சார வாகன உற்பத்தியில் அதிக கவனம் செலுத்துவதாகவும் கூறினார்.
ஈ-ஆட்டோ மற்றும் ஈ- கார்கோ வாகனங்களில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வளர்ச்சியை அடைந்து வருவதாகவும், ஆட்டோக்களுக்கான சந்தையும் பிரகாசமாக உள்ளது எனவும் அவர் கூறுகிறார். மாதம் தோறும் 50,000 முதல் 60,000 மின்சார ஆட்டோக்கள் விற்பனை செய்வதாகவும் அவர் கூறுகிறார்.
தற்போது இந்தியாவில் கிடைக்கும் ஈ-ரிக்ஷாக்கள் தரக்குறைவானவையாக உள்ளன என்றும் அவற்றின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தரமான ஈ-ரிக்ஷா உற்பத்தியை பஜாஜ் நிறுவனம் தொடங்க இருப்பதாக அவர் கூறினார்.
ரூ.1 லட்சம் விலையில் சேட்டாக்கின் மின்சார வாகனத்தை இந்த மாதம் அறிமுகம் செய்யப்போவதாகவும், அடுத்த மூன்று ஆண்டுகளில் 8 மின்சார வாகனங்கள் சேட்டாக் பிராண்டின் கீழ் வெளியிடப்படும் என்றும் ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
பஜாஜ் ஆட்டோ நிறுவன நிதித்துறையின் சிறப்பு அதிகாரியான தினேஷ் தாபர், இந்தியாவின் 60 நகரங்களில் பஜாஜ் மின்சார மூன்று சக்கர வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பதாகக் குறிப்பிட்டார். மின்சார மூன்று சக்கர வாகனங்களின் சந்தையில் 30 சதவீதம் பஜாஜ் ஆட்டோ வசம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வரும் காலங்களில் இது அதிகரிக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.