அடுத்த ஆண்டு புதிய ஃபேமிலி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் ஏதர்!
அடுத்த ஆண்டு புதிய ஃபேமிலி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளாதாக ஏதர் நிறுவனம் தெரிவித்துள்ளது
மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஏதர் எனர்ஜி, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புதிய குடும்ப ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை வெளியிட்டுள்ள ஏதர் எனர்ஜியின் தலைமை நிர்வாக அதிகாரி தருண் மேத்தா, வரவிருக்கும் ஸ்கூட்டர் தற்போதைய 450 சீரிஸை விட பெரியதாக இருக்கும் என்றும், அதிக இடவசதியுடன் புதிய ஸ்கூட்டர் இருக்கும் என்றும் உறுதிபடுத்தியுள்ளார்.
புதிய ஸ்கூட்டர் மலிவு விலையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். புதிய ஸ்கூட்டரைத் தவிர, 450 சீரிஸ் ஸ்கூட்டர்களும் அடுத்த ஆண்டு இதே நேரத்தில் புதுப்பிப்புகளைப் பெறும் எனவும் தருண் மேத்தா தெரிவித்துள்ளார். செயல்திறனை மேம்படுத்தும் போது தூய்மையான, கூர்மையான மற்றும் சிறிய வடிவமைப்பை பராமரிப்பதில் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
2024 ஏத்தர் 450 ரேஞ்ச் சுத்திகரிக்கப்பட்ட செயல்திறனின் உச்சத்தை வழங்கும் எனவும், சிறந்த இன்-கிளாஸ் அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று கூறிய தருண் மேத்தா, இவை பிரீமியம் விலையில் கிடைக்கும் என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால், அதன் விலைக்கு ஏற்ப இருக்கும் எனவும் அவர் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது, ஏதர் 450 ஆனது, 450S மற்றும் 450X என இரண்டு வகைகளில் கிடைக்கிறது. 450X, ஒரு பெரிய 3.7 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது, ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை செல்லும். இரண்டு வகைகளும் மணிக்கு 90 கிமீ வேகத்தில் செல்லும். 450Sக்கான விலை ரூ.1.30 லட்சத்தில் இருந்து தொடங்குகின்றன. அதே சமயம் 450X ரூ.1.38 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.
புதிய ஃபேமிலி ஸ்கூட்டரின் அறிமுகம் மற்றும் 450 தொடரின் புதுப்பிப்புகளுடன், ஏதர் எனர்ஜி தனது வாடிக்கையாளர்களுக்கு புதுமையான மற்றும் உயர் செயல்திறன் கொண்ட மின்சார இருசக்கர வாகனங்களைத் தொடர்ந்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.