குற்றால அருவி வெள்ளப்பெருக்கு.. இரு நாள்களுக்கு முன் இறந்த அஸ்வின் - மாபெரும் தியாகியின் கொள்ளுப்பேரன்!

May 19, 2024, 7:59 PM IST

பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப்பெருக்கின் போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு பலியான அஸ்வின் நெல்லை மாநகரப் பகுதியான என்ஜிஓ காலனியில் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் சிபிஎஸ்சி பத்தாம் எழுதி முடிவுக்காக காத்திருந்த நிலையில் அடுத்த வகுப்புக்குச் செல்ல உள்ளார். தற்போது கோடை விடுமுறை என்பதால், மூன்று நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் மேலகரத்திலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உறவினர்களுடன் பழைய குற்றால அருவியில் குளிக்கச் சென்ற நிலையில் அஸ்வின் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப்பெருக்கு பரிதாபமாக பலியான நிலையில் உயிரிழந்த சிறுவன் அஸ்வின் சுதந்திரப் போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழனுமான வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப்பேரன் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. 

அதே நேரத்தில் சிறுவன் அஸ்வின் இறந்த சோகத்தில் அவரது குடும்பத்தினர் இருப்பதால் இதுகுறித்து பேச அவர்கள் மறுத்துவிட்டனர். மேலும் வீட்டுக்கு வேறு யாரும் வர வேண்டாம் எனவும் அவர்கள் கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அஸ்வினின் தந்தையான குமார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

மகன் ஆசைப்பட்டார் என்பதற்காக குடும்பத்துடன் நெல்லையிலிருந்து தென்காசி வந்திருந்த குமார் அங்கு இரண்டு நாட்கள் தங்கி இருந்தார். இந்த நிலையில் தான் குடும்பத்துடன் குளிக்கச் சென்றபோது அஸ்வின் உயிரிழந்தது அவர்களது குடும்பத்தினரையும் உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதை அடுத்து பலரும் அவருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.