Oct 23, 2022, 7:39 PM IST
நெல்லை மாவட்டத்தில் பொதுமக்களிடையே தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளது. குறிப்பாக நெல்லை மாநகரில் ஜவுளி, பூக்கள் பட்டாசு மற்றும் பலகாரங்கள் போன்ற பொருட்களின் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நெல்லையை பொருத்தவரை டவுண் நெல்லையப்பர் சன்னதியின் நான்கு ரத வீதிகள் மாவட்டத்தின் முக்கிய ஜவுளி விற்பனை மையமாக இருக்கிறது.
இங்கு முன்னணி ஜவுளி கடைகள் முதல் ஏழை நடுத்தர மக்கள் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு சிறு சிறு கடைகளும் ஏராளம் உள்ளன. எனவே நெல்லை மாநகரம் மட்டுமல்லாமல் பல்வேறு கிராமப்புறங்களைச் சேர்ந்த பொதுமக்களும் தீபாவளிக்கு புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்க இங்கு படையெடுத்துள்ளனர். இதனால் டவுனில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வண்ணாரப்பேட்டை பாளையங்கோட்டை போன்ற பகுதியிலும் தீபாவளியை ஒட்டி கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து தங்கள் குழந்தைகளுக்கு தேவையான புத்தாடைகள் பட்டாசுகள் மற்றும் பலகாரங்களை உற்சாகமுடன் வாங்கி செல்கின்றனர். பொதுமக்களை கவரும் வகையில் பல சாலையோர வியாபாரிகளும் கடை அமைத்துள்ளனர். இதற்கிடையில் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் என்பதால் முன்னெச்சரிக்கையாக நெல்லை மாநகர காவல்துறை சார்பில் மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான டவுண் வண்ணாரப்பேட்டை சந்திப்பு பாளையங்கோட்டை போன்ற பகுதியில் சுமார் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கண்காணிக்கும் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர். இது தவிர ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். டவுன் மற்றும் வண்ணாரப்பேட்டையில் போலீசார் உயர் கோபுரம் அமைத்து கூட்டத்தை கண்காணித்து வருகின்றனர் குற்ற சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க..பள்ளிகளுக்கு தீபாவளி மறுநாள் விடுமுறையா ? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் நியூஸ்.!