Apr 11, 2023, 8:47 PM IST
தேனி மாவட்டம், தேனி திட்டச்சாலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 30 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் சென்றாயபெருமாள் என்ற ஒரு தலைமை ஆசிரியரும், சுமதி என்ற ஆசிரியையும் பணிபுரிந்து வருகின்றனர்.பள்ளியின் தாளாளராக அன்பழகன் என்பவர் உள்ளார்.
அன்பழகன் தேனி அல்லிநகரத்தில் செயல்பட்டு வரும் முத்தையா என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அன்பழகன் அரசு உதவி பெறும் பள்ளியை நடத்தி வருவதை மறைத்து, மற்றொரு அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் சென்றபோதும் அவர்கள்,அன்பழகனிடம் பணம் பெற்றுக் கொண்டு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் தன்னைப் பற்றி உயர் அதிகாரிகளிடம் புகார் அளிப்பது,தனது பள்ளியில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வரும் சென்றாயபெருமாள் மற்றும் சுமதி தான் என நினைத்து அவர்களை அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் இவர்களுக்கு பல மாதங்கள் சம்பளம் கூட வழங்காமல் இருந்துள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அவர்கள், தற்போது அரசு மூலம் நேரடியாக சம்பளம் பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று பிற்பகலில் பள்ளிக்கு வந்த தாளாளர் அன்பழகன் தலைமை ஆசிரியர் சென்றாயபெருமாளிடம் தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்துள்ளார்.இந்த நிலையில் திடீரென பள்ளி வகுப்பறைக்குள் மாணவ,மாணவிகள் கண் முன்னால் சரமாரியாக தலைமை ஆசிரியர் சென்றாய பெருமாளை ஆபாசமாக பேசி தாக்கியதுடன் கீழே தள்ளி விட்டுள்ளார்.பள்ளியின் அனைத்து வகுப்பறைகள் மற்றும் மெயின் கேட்டையும் பூட்டிவிட்டு சென்று விட்டார்.
இதனால் வகுப்பறைகளுக்குள் அமர்ந்திருந்த மாணவ, மாணவிகள் அலறத் தொடங்கினர். தாளாளர் அன்பழகன் தலைமை ஆசிரியரை அடித்த காட்சிகள் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதை அறிந்த பள்ளி தாளாளர் அன்பழகன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. போலீசார் அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க..லெஜன்ட் சரவணன் உடன் நடிக்க சென்ற மணிமேகலை... குக் வித் கோமாளியை விட்டு விலகியது இதுக்குத்தானா?
இதையும் படிங்க..நோ சீட்.! பல்டி அடித்த பாஜக தலைவர்.. அண்ணாமலை போட்ட ட்வீட் - கர்நாடக தேர்தலில் அதிரிபுதிரி