Sep 22, 2022, 5:01 PM IST
மதுரை மண்டல அளவிலான கல்விக்கொள்கை குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில கல்விக் கொள்கை உயர்மட்டக்குழுத் தலைவர் முன்னாள் தலைமை நீதிபதி டி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் அவர்களது பெற்றோர்களுடன் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் 4ஆம் வகுப்பு மாணவன் உதயன், தான் பயிலும் பள்ளியில் கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும், கழிவுறைக்கு தேவையான நீர் வசதி இல்லை எனவும் குற்றம்சாட்டினார். பள்ளிகளுக்கு தரமான கட்டிடங்களை தந்து, நல்ல சீருடைகளை வழங்க வேண்டும் என மாணவன் உதயன் கேட்டுக்கொண்டார்.
மாணவனை தொடர்ந்து பேசிய அவரது தாயார் கோகில வாணி, திருப்பரங்குன்றம் ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் செய்து தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தின் நிறைவில் கல்விக் கொள்கை உயர்மட்டக்குழுத் தலைவரை சந்தித்த மாணவன் உதயன், இவைகள் தனது தனிப்பட்ட கோரிக்கைகள் அல்ல என்றும், ஒட்டுமொத்த மாணவர்களின் கோரிக்கை எனக்கூறி மனு ஒன்றையும் அளித்தார். பொதுநலத்தோடு செயல்பட்ட மாணவ உதயனை உயர்மட்டக்குழுவினர் பாராட்டினர்.