Sep 10, 2024, 3:47 PM IST
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வசிக்கும் காசி என்ற சுஜி, சமூக வலைதளங்கள் மூலம் பெண்களுடன் நெருக்கமாக பழகி, அவர்களின் ஆபாச புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்து மிரட்டி பணம் கேட்டதாக ஒரு புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில், 2020ஆம் ஆண்டு, காசியை போலீசார் கைது செய்தனர். பின்னர் குண்டர் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீஸார், காசியின் லேப்டாப் மற்றும் மொபைல் போன்களில் 400 ஆபாச வீடியோக்களும் 1900 நிர்வாணப் புகைப்படங்களும் இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதனை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பாக, நாகர்கோவில் விரைவு நீதிமன்றம் காசிக்கு ஆயுள் தண்டனையையும் ரூ.1.10 லட்சம் அபராதத்தையும் விதித்து தீர்ப்பளித்தது. காசி, இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
மேலும், இந்த ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்தே ஜாமீன் வழங்குமாறு தனி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஜெ. சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரித்தார்கள். பிறகு நீதிபதிகள், "மனுதாரரின் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளன. குற்றத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, அவரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று தீர்ப்பளித்தனர். மேல்முறையீட்டு மனுவுக்கு சிபிசிஐடி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.