Jun 15, 2023, 10:01 AM IST
மதுரை - போடி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த ரயில் பாதையில் மதுரை - தேனி இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில் போக்குவரத்து கடந்த ஆண்டு தொடங்கியது. போடி வரை பணிகள் முடிந்ததை தொடர்ந்து பல்வேறு கட்ட சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து தேனி வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் நாளை முதல் போடி வரை நீட்டிக்கப்பட உள்ளது. அதுபோல், சென்னை - மதுரை இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் விரைவு ரயில் சேவை போடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிக்கப்பட்ட ரயில் சேவையும் நாளை முதல் தொடங்குகிறது.
ரயில் போக்குவரத்து நீட்டிப்பை முன்னிட்டு மதுரை-போடி இடையே விரைவு ரயில் சோதனை இன்று நடந்தது. 110 கி.மீ. வேகத்தில் இந்த விரைவு ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதற்காக மதுரை ரயில் நிலையத்தில் இருந்து இன்று 2 பெட்டிகளுடன் ரயில் புறப்பட்டது. உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி வழியாக போடிக்கு இந்த ரயில் விரைந்து சென்றது.