அரசுப் பேருந்துகளில் மாணவர்கள், இளைஞர்கள் படியில் தொங்குவதை தவிர்க்க போக்குவரத்து கழகம் புது முயற்சி

Dec 26, 2023, 2:01 PM IST

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசுப் பேருந்துகளில் இலவச பயணத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் கிராமப்புறங்களில் இருந்து நகரத்திற்கு வரும் மாணவர்கள் போதிய பேருந்து வசதி இல்லாமல் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் மேற்கொள்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க ஒருசில பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்கள் சாகசம் செய்யும் நோக்கில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் மேற்கொள்கின்றனர். அப்படி பயணம் மேற்கொள்ளும் பொழுது விபத்தில் சிக்கி உயிர்பலி ஏற்படும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். இந்நிலையில் இது போன்ற பயண நேரத்தில் விபத்துக்களை தவிர்க்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக காஞ்சிபுரம் பணிமனையில் இயக்கப்படும் நகரப் பேருந்துகளின் படிக்கட்டுகளில் இரு பகுதிகளிலும் தகரம் கொண்டு அடைத்து மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்யாத வண்ணம் பரிசோதனை ஓட்டம் சில பேருந்துகளில்  நடைபெற்றது.

இதற்கு அனைத்து தரப்பு பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்ததால் காஞ்சிபுரம் பணிமணியின் கீழ் செயல்படும் அனைத்து நகர பேருந்துகளிலும் இதுபோன்ற தகரம் பொருத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். படியில் ஏறி உள்ளே செல்லும் வகையில் மட்டுமே இனி இருக்கும் என்பதால் விபத்துக்கள் குறையும் என்பதும், இதன் பிறகு மாணவர்கள் தங்கள் உயிரின் மதிப்பை அறிந்து படிக்கட்டு பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.