ராமர் கோயிலுக்கு 13 கிலோ எடையுள்ள வெள்ளி வில், அம்பு காணிக்கை! அதற்கு முன்னதாக காஞ்சிபுரம் வந்த பக்தர்கள்!

May 22, 2024, 11:32 AM IST

ஆந்திர மாநில பக்தர்கள் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு 13 கிலோ எடையுள்ள வெள்ளி வில் மற்றும் அம்பு ஆகியனவற்றை காணிக்கையாக செலுத்தவுள்ளனர். அவர்கள் காணிக்கையாக செலுத்துவதற்கு முன்பாக காஞ்சிபுரம் வந்து சங்கர மட வளாகத்தில் உள்ள மகா பெரியவர் அதிஷ்டானத்தில் வைத்து சிறப்பு வழிபாடுகளையும் செய்தனர். 

காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளி வில் மற்றும் அம்பு ஆகியவற்றை மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களில் வைத்து சிறப்பு பூஜை செய்து ஆந்திர மாநில பக்தர்களிடம் வழங்கினார். பின்னர் ஆந்திர மாநில பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருளாசி வழங்கினார்.

இதனையடுத்து வெள்ளி வில்லும், அம்பும் அயோத்தி கோயிலுக்கு ஆந்திர மாநில பக்தர்களால் எடுத்துச்செல்லப்பட்டது. இந்நிகழ்வில் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர்,ஸ்ரீ காரியம் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி,  நிர்வாகிகள் ஜானகிராமன், கீர்த்திவாசன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.