கோவையில் கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்த நபர்களின் மொத்த குடும்பத்தையும் கொலை செய்யும் நோக்கில் இளைஞர்கள் ஆயுதங்களுடன் வீட்டை தாக்க முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சிங்காநல்லூர் SIHS காலனியில் வசித்து வருபவர்கள் வீரலட்சுமி குடும்பத்தினர். இவரது வீட்டின் அருகில் சில இளைஞர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பலரும் கஞ்சா வாங்க வருவதாகவும், இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட முடியாத சூழல் நிலவுவதாகவும், சில நேரங்களில் அங்கு வரும் சில இளைஞர்கள் பணம் கேட்டு வழிப்பறியில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வீரலட்சுமியின் மகன்களை கஞ்சா விற்பனை செய்யும் இளைஞர்கள் வழிமறித்து பணம் கேட்டு தகராறில் ஈடுப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து கடந்த ஏப்ரல் மாதம் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் அந்த இளைஞர்கள், வீரலட்சுமியையும், அவரது இரண்டு மகன்களையும் மிரட்டியுள்ளனர். இதனால் இரு தரப்பிற்கு அடிக்கடி வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கஞ்சா விற்பனை செய்யும் தரப்பு இளைஞர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டை நோட்டமிட்டு வந்துள்ளனர். மேலும் கடந்த ஏப்ரல் மாதம் வீரலட்சுமியின் இல்லத்திற்கு ஆயுதங்களுடன் சென்ற இளைஞர்கள் வீரலட்சுமியின் குடும்பத்தினரை தாக்க முயன்றுள்ளனர். அந்த நேரத்தில் குடும்பத்தாரும் சுதாரித்து கொண்டதால் அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். எனினும் தொடர்ந்து அக்கும்பல் ஆயுதங்களுடன் அடிக்கடி வரலட்சுமியின் இல்லத்தை நோட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வரலட்சுமி மனு அளித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த வீரலட்சுமி, இந்த இளைஞர்கள் குறித்து போலிசாரிடம் தெரிவித்தால் போலிசார் ரோந்து வரும் போது அந்த இளைஞர்கள் தப்பி ஓடி விடுகின்றனர். சிறிது நேரம் கழித்து வந்து மீண்டும் கஞ்சா விற்பனை, வழிப்பறியில் ஈடுபடுகின்றனர்.
தஞ்சையில் உயிரிழந்த மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தி அனைவரையும் கண்கலங்கச் செய்த பெற்றோர்
மேலும் தன்னுடைய மகனை இரண்டு முறை வெட்ட முயன்றனர். இது குறித்து புகார் அளித்த நிலையில், இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டார். சில நாட்களுக்கு முன்பு தனது மகனை அந்த இளைஞர்கள் வழிப்பறி செய்ய முயன்று தாக்கியதால் தங்கள் மகன்களுக்கும் அந்த இளைஞர்களுக்கும் தொடர்ந்து தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் தங்களால் வெளியில் கூட நடமாட முடிவதில்லை எனவும், கொலை மிரட்டல் விடுவதாகவும் கூறினார்.
இது குறித்து பேசிய தாமஸ் என்ற இளைஞர், இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டதில் அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் கைதாகி வெளியில் வந்ததாகவும் பின்னர் தீவிரமாக தங்களை கொலை செய்ய முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.