கோவை மாவட்ட காவல் துறை மற்றும் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினருடன் இணைந்து 23 சிறப்பு குழுக்கள் தமிழக அரசால் அமைக்கப்பட்டு கோவை மாநகராட்சி பகுதிகளில் சோதன மேற்கொண்டனர்.
கோவை மாவட்டம் பீளமேடு, கணபதி, போத்தனூர், டவுன்ஹால், ஆர்.எஸ்.புரம், சரவணம்பட்டி, சாய்பாபா காலனி, சிங்காநல்லூர், காளப்பட்டி, அவிநாசி ரோடு, காந்திபுரம், வடவள்ளி, ரேஸ் கோர்ஸ், ராமநாதபுரம் மற்றும் புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சூலூர், கிணத்துக்கடவு, மதுக்கரை, தொண்டாமுத்தூர், அன்னூர், எஸ்.எஸ் குளம், பெரியநாயக்கன் பாளையம், காரமடை, ஆனைமலை, வால்பாறை போன்ற பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருளான பான்மசாலா மற்றும் குட்கா விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு சிறப்பு கூட்டு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி 5,568 கடைகளில் திடீர் கூட்டு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது 692 கடைகளில் சுமார் 3098.38 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருளான பான்மசாலா மற்றும் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்காவின் சந்தை மதிப்பு சுமார் ரூபாய் 30 லட்சத்து 63 ஆயிரத்து 804 ஆகும். மேலும் கள ஆய்வின் முடிவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள், பான்மசாலா மற்றும் குட்கா விற்பனை செய்த முதல் முறை குற்றம் புரிந்த 683 கடைகளுக்கு அபராதமாக தலா ரூபாய் 25 ஆயிரமும், அவர்களது கடையில் வணிகம் மேற்கொள்ள 15 நாட்கள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூபாய். 1 கோடியே 70 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் முறை குற்றம் புரிந்த 8 கடைகளுக்கு அபராதமாக ரூபாய் 50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூபாய்.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களது கடையில் வணிகம் மேற்கொள்ள 30 நாட்கள் தடை செய்யப்பட்டு உள்ளது.
நாகூர், வேளாங்கண்ணில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளித்த மனித கடவுள்
இதுபோன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை கண்டறிய நேரிட்டால் 94440 42322 என்ற உணவுப் பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.