கோவையில் பெட்ரோல் பங்க் ஒன்றில் பேருந்தை நிறுத்திவிட்டு அயர்ந்து தூங்கிய தனியார் பேருந்து ஓட்டுநர் அதே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் காளப்பட்டி காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 25). தனியார் பேருந்து ஓட்டுநரான கருப்பசாமி நேற்று இரவு வழக்கம் போல் சிறுவாணி சாலை பச்சாபாளையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பேருந்தை நிறுத்திவிட்டு பேருந்தின் அடியில் படுத்து உறங்கி உள்ளார். இதே போன்று மற்ற சில தனியார் பேருந்துகளும் அங்கு நிறுத்தப்பட்டன.
கோவையில் விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய லாரன்ஸ்; கருப்பு எம்ஜிஆர் என புகழ்ந்த மக்கள்
வழக்கமாக பேருந்தை அங்கு நிறுத்தும் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் பேருந்தினுள் படுத்து உறங்குவது வழக்கம். ஆனால் தற்போது கோடைகாலம் என்பதால் வெப்பம் தாங்காமல் கருப்பசாமி பேருந்தின் கீழ் பகுதியில் படுத்து உறங்கி உள்ளார். இன்று காலை வழக்கம் போல் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் எழுந்து தங்கள் பணிக்கு ஆயத்தமாகினர். கருப்ப சாமியையும் அவர்கள் எழுப்பி விட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், கருப்பசாமி அயர்ந்து தூங்கியதாக தெரிகிறது. இதனிடையே கருப்பசாமி இயக்கிய வந்த பேருந்தை இயக்குவதற்கு மாற்று ஓட்டுநரும் வந்துள்ளார். அப்போது பேருந்தை சற்று நகர்த்தி நிறுத்துவதற்காக மாற்று ஓட்டுநரான சூர்யா பேருந்தை முன்னோக்கி இயக்கி உள்ளார். இதனால் பேருந்தின் அடியில் படுத்து உறங்கிய கருப்பசாமி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி கண்ணிமைக்கும் நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சூர்யாவை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே உயிரிழந்த கருப்பசாமிக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த தகவல் தற்போது வெளியாகி கூடுதல் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.