வைகோவிடம் கேட்பீர்களா? பி.பி.சி. பேட்டியில் வெளுத்து வாங்கிய ஜெயலலிதா

First Published Dec 12, 2016, 9:25 AM IST
Highlights


கடந்த 2001-ம் ஆண்டு பி.பி.சி.தொலைக்காட்சி சேனலுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேட்டி அளித்தார். அப்போது நிகழ்ச்சியின் ஒருங்கினைப்பாளர் கேட்ட கேள்விக்கு ஜெயலலிதா அளித்த பதில்கள்.

நீங்கள் நியூமரலாஜி மற்றும் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர் எனக் ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் கூறப்படுகிறதே?

ஜெயலலிதா- நான் நியூமராலஜி மற்றும் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர் யார் கூறியது?. நீங்கள் கூறுகிறீர்கள். ஊடகங்கள் கூறுகின்றன. நான் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர் என்று கூறுவதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது. ஏன் ஜோதிடத்தில் நம்பிக்கை  உள்ளவர் என கூறுவதற்கு நான் ஏன் வெட்கப்பட வேண்டும்.

கேள்வி- நல்லநேரம் பார்த்து தான் எந்தகாரியத்தையும்  செய்வீர்களாமே?

ஜெயலலிதா- நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் நல்லநேரம் பார்த்துதான் பல செயல்களைச் செய்கிறார்கள். இதே கேள்வியை நீங்கள் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் அடல்பிகாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி ஆகியோரிடம் கேட்டதுண்டா?.

கேள்வி-நீங்கள் பெரும்பாலான நேரத்தை கடவுளை வழிபடுவதற்கும், அதற்காக பிரத்யேகமான நேரத்தை தேர்வு செய்கிறீர்கள் என ஊடகங்கள் கூறுகின்றன. நீங்கள் என்ன மூடநம்பிக்கை உள்ளவரா?

ஜெயலலிதா- நான் மூட நம்பிக்கை உள்ள பெண் கிடையாது. இந்த பேட்டி கொடுத்ததற்காகவே நான் வருத்தப்படுகிறேன். நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும், பத்திரிகைகள் தெரிவிக்கின்றன, தொலைக்காட்சி சேனல்கள் தெரிவிக்கின்றன என கூறுகிறீர்கள். ஊடகங்கள் எப்போதும் கருணை இல்லாமல், நீதியைப் பார்க்காமல், அடிப்படைஆதாரங்கள் இல்லாமல் குறைகூறக் கொண்டே இருக்கிறார்கள். ஊடகங்கள் சொல்வதையும், பத்திரிகைகள் எழுதவதையும் மக்கள் நம்பிவிட்டார்கள் என்றால், நான் ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற்று இருக்க முடியாது.

கேள்வி- கடந்த 2001ம் ஆண்டு தேர்தலில் உங்கள் பெயரில் சிறு மாற்றம் செய்து, உங்கள் பெயரில் கூடுதலாக ஒரு எழுத்து சேர்த்தீர்கள். அப்படியானால், நீங்கள் நியுமராலஜியில் நம்பிக்கை உள்ளவர் என்று கூறலாமா?

ஜெயலலிதா- இந்த கேள்வி என்னை ஆத்திரமூட்டுவதற்காக கேட்கிறீர்கள். இந்த விசயத்தில் நான் எதையும் உங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் மீண்டும் முதல்வராக வருவதற்கு முன்பே என் பெயரில் மாற்றம் செய்துவிட்டேன். இது எனது தனி உரிமை. வைகோ ஏன் வை.கோபால் சாமி என்ற தனது பெயரை வைகோ என்று சுருக்கி வைத்துள்ளார் என இதற்கு முன் இந்த கேள்வியை அவரிடம் கேட்டு இருக்கிறீர்களா? போய் முதலில் அந்த கேள்வியை முதலில் அவரிடம் கேளுங்கள்.

நான் இப்போதும் சொல்கிறேன் நான் நேர்மையான சிந்தனை உடையவள். மூடநம்பிக்கை அற்றவள். 

புத்திசாலித்தனமான, மிகவும் பொறுப்புள்ள ஒரு தலைவர். நான் ஒரு விஷயத்தை இங்கு கூற விரும்புகிறேன். தமிழ்நாட்டின் முதல் அமைச்சர்கள் வரலாற்றில் என்னைக் காட்டிலும் மாநிலத்தின், மக்களின் நலனுக்காக உழைக்கும் முதல்வர் யாரும் இருந்ததில்லை என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன். அந்த பணியைத்தான் செய்து வருகிறேன். அடுத்துவரும் காலங்களிலும் அதைத்தான் செய்வேன்.

கேள்வி- கடந்த 1996-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நீங்கள் தோல்வி அடைந்தபோது, அதற்கு ஊடகங்கள், பத்திரிக்கைகள் உங்களைப்பற்றி  எழுதியதுதான் காரணமா?

ஜெயலலிதா- நான் உங்களுக்கு ஏற்கனவே ஒன்று கூறிவிட்டேன். பத்திரிகைகள், சேனல்கள் கூறுவதையும், எழுதுவதையும் மக்கள்முழுமையாக நம்பினால், தேர்தலில் நான் வெற்றிபெற்று இருக்க முடியாது. 

அப்படிப்பார்த்தால், 1998-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் நாங்கள் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றோம்.அதற்கு என்ன சொல்லுவது?. 

ஒரு விசயத்தை புரிந்து கொள்ளுங்கள் ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் ஏற்றம், இறக்கம் இருப்பது இயல்பு. அதைக்கடந்து தான் அனைவரும் வர இயலும். 

ஒரு அரசியல்வாதியின்  அரசியல் வாழ்க்கை முழுவதும் தோல்விகள், வெற்றிகள் நிரம்பி இருக்கும். யாராவது தொடர்ந்து வெற்றிகளை மட்டும் பெற்றவர்கள்  இருக்கிறீர்களா?, அல்லது தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்தவர்கள் இருக்கிறீர்களா?

கேள்வி- நீங்கள் ஏராளமான வழக்குகளை சந்தித்து இருக்கிறீர்கள்.சந்தித்தும் வருகிறீர்கள். அதைக் கண்டு கவலைப்பட்டது உண்டா?, பயந்தது உண்டா?

ஜெயலலிதா- நான் கடந்த 1996-ம் ஆண்டு முதல் ஏராளமான வழக்குகளை சந்தித்து வருகிறேன். அனைத்து வழக்குகளும் வேண்டுமென்றே என்மீது போடப்பட்ட, ஜோடிக்கப்பட்ட வழக்குகள். இந்த வழக்குகளைப் பார்த்து ஒருபோதும் நான்பயந்து ஓடியது இல்லை. நான் இப்போதுவரை 12 வழக்குகளில் நிரபராதி என தீர்ப்பை நீதிமன்றத்தில் இருந்து பெற்று இருக்கிறேன்.  இதில் இருந்து உங்களுக்கு என்ன தெரிகிறது. அந்த வழக்குகள் பொய்யானவை.

கேள்வி- நீங்கள் 2006ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவீர்களா?

ஜெயலலிதா- நான் ஏற்கனவே கூறிவிட்டேன். ஊகங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அடுத்ததேர்தலில் என்ன நடக்கும் முடிவுகள் எப்படி இருக்கும் எனத் தெரியாது. பொறுத்து இருந்து பார்ப்போம். 

இவ்வாறாக பேட்டி முடிகிறது. 

click me!