AM , PM பாராமல் உழைக்கும் எங்கள் CM - உறுப்பினர் பேச்சை ரசித்து சிரித்த ஜெயலலிதா

First Published Dec 8, 2016, 3:58 PM IST
Highlights


AM , PM பாராமல் உழைக்கும் எங்கள்  CM என்று சட்டசபையில்  பஞ்ச் வைத்து பேசிய உறுப்பினர் கன்னிப்பேச்சை ரசித்து சிரித்தார் ஜெயலலிதா. 

சட்டமன்றத்தில் முதன் முதலாக பேசும் உறுப்பினர் பேச்சை கன்னிப்பேச்சு என்பார்கள். அவர்கள் என்ன பேசினாலும் அதில் பெரும்பாலும் யாரும் குறிக்கிட மாட்டார்கள். இதை ஒரு மரபாக சட்டமன்றத்தில் கடைபிடிப்பது வழக்கம். சமீபத்தில் கூட திமுக உறுப்பினர் அன்பில் பொய்யாமொழி மகேஷ் பேசும்போது சர்ச்சை ஏற்பட அமைச்சர்கள் பதிலளிக்க எழுந்தபோது சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் உறுப்பினர் கன்னிப்பேச்சு இதில் குறுக்கிடாதீர்கள் என்று கேட்டுகொண்டனர். 

திமுக உறுப்பினர்கள் இப்படி என்றால் அதிமுக உறுப்பினர்கள் நிலையோ இன்னும் சிக்கல். தங்கள் கன்னிப்பேச்சை யாராவது எழுத தெரிந்தவர்களை , அல்லது தனக்கு தெரிந்த அளவில் அதை தயார் செய்து முதல்வர் முன்னால் பேசி பெயர் வாங்க வேண்டும் என்று விரும்புவார்கள். 

அதிலும் முதல்வர் சபையில் இருக்கும் போது தனக்கு பேச வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்று விரும்புவர். முதல்வர் இருக்கும் போது வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்று வேண்டுவர். 

2011 சட்ட மன்ற தொடரின் போது இதுபோன்றதொரு வாய்ப்பு மயிலாப்பூர் எம்.எல்.ஏ ராஜலட்சுமிக்கு கிடைத்தது. அவர் பேச எழும் போது முதல்வர் ஜெயலலிதா சபையில் இருந்தார். முதல்வருக்கு நேர் எதிரே நான்கைந்து வரிசைகள் தள்ளி அவர் பார்வையில் எப்போது இருக்கும் இடம் ராஜலட்சுமிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. 

 

எழுந்த உடனேயே ராஜலட்சுமி படபடப்பானார். முதல்வர் அதை கவனித்தார் கண்ணாலேயே அவருக்கு ஜாடை காட்டினார். தொடர்ந்து பேச முயன்ற ராஜலட்சுமி தடுமாறி தடுமாறி பேசினார். முதல்வர் முன்பு பேசும் பதற்றம் அவரை தொற்றிகொண்டது. இதை கவனித்த முதல்வர் சிரித்தபடியே தலையை அசைத்து பேசுங்கள் என்று சைகை காட்டியவுடன் அவர் தயக்கமின்றி பேசி முடித்தார். 

இதே போன்று அதே கூட்டத்தொடரில் கன்னிப்பேச்சு பேசிய வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் பேச அழைக்கப்பட்டார். அவர் பேசும் போது முதல்வர் சபையில் அமர்ந்திருந்தார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின்னால் மூன்றாவது வரிசையில் அவர் அமர்ந்திருந்தார். பேசத்துவங்கிய அஷோக் நன்றாக பேசினார். பேச்சின் இடையே எங்கள் அம்மா முதல்வர் '’’ AM , PM பாராமல் உழைக்கும் எங்கள்  CM '’’  என்று குறிப்பிட்டார். 

24 மணி நேரமும் உழைப்பவர் என்ற அர்த்தத்தில் இந்த தலைப்பை அவர் பயன்படுத்தினார். இதை முதல்வர் ஜெயலலிதா பெரிதும் ரசித்தார். அப்போது அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பின்னாளில் அமைச்சரான மோகன் கொறடா என்ற ரீதியில் பேச்சை முடி முடி என்று அவரை நெருக்கிகொண்டிருந்தார். 

இதனால் அஷோக்கின் பேச்சில் தடுமாற்றம் ஏற்பட்டது. பேச்சை ரசித்து கேட்டு கொண்டிருந்த முதல்வர் இதை கவனித்து என்னதான் நடக்கிறது என்று திரும்பி பார்த்தார். உறுப்பினர் அஷோக் முதல்வர் தன்னை பார்த்தவுடன் வெளவெளத்து போனார். அவரை தடுத்து கொண்டிருந்த மோகனும் அரண்டு போனார். 

முதல்வர் சிரித்தபடியே என்னாச்சு என்று கேட்க அஷோக் சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பேச்சை தொடர்ந்தார். அதன் பிறகு கொறடா மோகன் ஏன் அவரை உட்காரசொல்ல போகிறார். சிவனே என்று அமர்ந்திருந்தார். 

இது போன்று பல நிகழ்வுகள் புதிய சட்டமன்ற உறுப்பினர்களை ஊக்கப்படுத்தும் விதமாக முதல்வர் கவனித்து கேட்பார். அவர்கள் கோரிக்கையையும் நிறைவேற்றியுள்ளார்.

click me!