பிரதமர் மோடியையே அலறவிட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..!

Oct 29, 2017, 11:44 AM IST



இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் என கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

ஜெயலலிதாவின் இறப்பிற்குப் பிறகு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதாவை, தான் உட்பட சில அமைச்சர்கள் பார்த்ததாகவும் அவர் இட்லி சாப்பிட்டார் எனவும் தெரிவித்தார். பின்னர், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் இணைந்து, சசிகலாவையும் தினகரனையும் கட்சியை விட்டு ஓரங்கட்டினர். அதன்பிறகு, அதே திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதாவை பார்த்ததாகக் கூறியது பொய் எனவும் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக சசிகலா கூறியதையே தான் கூறியதாகவும் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.

டெங்குவால் தமிழகம் முழுவதும் பலர் உயிரிழந்து கொண்டிருந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்குவால் யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவித்தார். அதன்பிறகு, டெங்குவால் உயிரிழப்பு இல்லை என அதிகாரிகள் கூறியதையே தெரிவித்ததாகக் கூறினார்.

இப்படியாக முன்னுக்குப் பின் முரணாகவும் என்ன பேசுகிறோம் என்பதில் தெளிவில்லாமலும் பேசிவந்த திண்டுக்கல் சீனிவாசன், அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

திண்டுக்கல்லில் நடந்த விழாவில் பேசிய அவர், டெங்குவைக் கட்டுப்படுத்த முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு தீவிரமாக செயல்பட்டது என்பதைக் குறிப்பிட விரும்பி, மாட்டிக்கொண்டார்.

அந்த விழாவில் பேசிய அவர், துணை முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லிக்கு சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து டெங்கு பாதிப்பை எடுத்துரைத்ததாக தெரிவித்தார்.

பிரதமர் மோடி என்பதற்குப் பதிலாக மன்மோகன் சிங் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளதோடு அவர் மீதான விமர்சனங்களை அதிகப்படுத்தியுள்ளது.

பிரதமராக மோடி பதவியேற்று சுமார் மூன்றரை ஆண்டுகள் ஆனபிறகும் அவரை பிரதமராக ஏற்றுக்கொள்ள திண்டுக்கல் சீனிவாசனுக்கு மனமில்லை போலும்? அதுதான் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயரை தற்போதைய பிரதமர் என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு அமைச்சராக இருந்துகொண்டு பிரதமரின் பெயரைக்கூட மேடையில் சரியாக கூற தெரியாத இவரெல்லாம் அமைச்சரா? என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. அமைச்சரின் பேச்சை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.