தென்னிந்தியாவை பொருத்தவரை விதவிதமான உணவு வகைகளை தட்டில் அடுக்கி வைத்திருந்தாலும், அதனை வாழை இலையில் பரிமாறி உண்ணவே அனைவரும் விரும்புவர். ஆவி பறக்கும் இட்லியை சூடாக இலையில் வைத்து அதன் நறுமணத்தினூடே சாம்பார், சட்னியுடன் உண்ணும் சுவைக்கு ஈடேயில்லை.
எந்த உணவாக இருப்பினும் அதை வாழை இலையில் சாப்பிடும் போது அவற்றின் சுவை இன்னும் அதிகரிக்கிறது என்றே சொல்லலாம். தென்னிந்தியாவில் தான் வாழை இலையில் உணவு பரிமாறும் பழக்கம் அதிகம் காணப்படுகிறது. அதிலும் பருப்பு வகைகளில் செய்த உணவே முதன்மையாக இடம்பிடிக்கின்றன. அது ஏன் என எப்போதாவது யோசனை செய்திருக்கிறீர்களா?
இதையும் படிங்க; உலகின் சிறந்த உணவு இதுதான்.! 2022ம் ஆண்டின் டாப் 50 நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா?
'ஜர்னல் ஆஃப் எத்னிக் ஃபுட்ஸ்' இதழில் வெளியான ஆய்வில், உலோகப் பாத்திரங்கள் வருவதற்கு முன்பே வாழை இலைகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. வாழை இலைகள் சற்று தடிமனாகவும், அளவில் பெரியதாகவும் காணப்படுவதால் உணவை பரிமாறும்போது கிழியாது. வாழை இலையில் பரிமாறுவது உணவுகளின் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். அவற்றை இங்கு காணலாம்.
நோயிலிருந்து பாதுகாப்பு!
வாழை இலையில் உண்ணும்போது நோய்களில் இருந்து தற்காத்து கொள்ள முடியும். இதில் இயற்கையிலே பாலிஃபீனால்கள் உள்ளன. இவை ஒரு வகையான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆகும். அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் சில நோய்களைத் தடுக்கிறது. இலையில் பரிமாறப்படும் உணவை உண்பதால், பாலிஃபீனால்கள் நமது உடலுனுள் கடத்தப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது என்று நம்பப்படுகிறது.
இதையும் படிங்க; கபசுர குடிநீரில் இவ்வளவு நன்மைகளா? ஆனாலும் இவங்களுக்கு மட்டும் கொடுக்காதீங்க!
இளமையாக இருக்கலாமே!
வாழை இலையில் உண்பதால் இளமையாக இருக்க முடியும். தொடர்ந்து வாழை இலையிலே உணவை எடுத்து கொள்வதால் இளநரை வராமல் நீண்ட நாள் முடி கருமையாக இருக்கும். தோல் சம்பந்தப்பட்ட நோய் குணமாகி சருமம் ஜொலிக்கும்.
பாக்டீரியாவிற்கு எதிரி!
வாழை இலைகளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. அதில் உணவை எடுத்து கொண்டால் நம் உடலில் உள்ள நச்சுத்தன்மை குறையும். நம் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.
ரசாயனங்களை தள்ளி வைக்கலாம்!
பொதுவாக நாம் பாத்திரங்களை சுத்தப்படுத்தும் போது சோப்புகளை உபயோகம் செய்கிறோம். இந்த சோப்புகளில் உள்ள ரசாயனங்கள் நம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பவை. நமது பாத்திரங்களில் அந்த ரசாயன எச்சங்கள் படிய வாய்ப்புள்ளது. வாழை இலையில் இயற்கையாகவே மெழுகு போன்ற படலம் காணப்படுகிறது. இதனால் உணவு அதன் மேற்பரப்பில் ஒட்டாமல் தடுக்கப்படுகிறது. வாழை இலைகளை நீரில் கழுவி மறுமுறை கூட பயப்படுத்த முடியும். உலோகம், கண்ணாடி தட்டுகளைவிட வாழை இலை மலிவானவை. இலைகளால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மறுபயன்பாட்டுக்கு பிளாஸ்டிக் தட்டுகளுடன் ஒப்பிடும்போது காகிதத் தட்டுகள் குறிப்பாக ஆரோக்கியமானவை. அதிலும் வாழை இலைகள் பதிலீடு செய்ய முடியாத நன்மைகளை தரக் கூடியவை. இனிமேல் பயன்படுத்த மறக்காதீங்க!