தி.மலை கோவிலில் யூனிபார்மில் இருந்த பெண் இன்ஸ்பெக்டர் கன்னத்தில் பளார்!திமுக நிர்வாகி உட்பட 3 பேர் மீது வழக்கு

First Published Dec 30, 2023, 8:44 AM IST

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவல் ஆய்வாளரைத் தாக்கிய திமுக நிர்வாகி மற்றும் அவரது மனைவி, கோயில் ஊழியர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

tiruvannamalai temple

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இக்கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலில் அறங்காவலர் குழு தலைவராக ஜீவானந்தம் எப்போது பொறுப்பேற்றாரோ அன்று முதல் அவர் மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. 

tiruvannamalai Annamalaiyar temple

இந்நிலையில், டிசம்பர் 27ம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதையொட்டி தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றுக்கொண்டிருந்தனர். அப்போது, விஐபி என்ற பெயரில் முன்னாள் நகர மன்ற தலைவரும், திமுக தலைமைச் செயற் குழு உறுப்பினருமான ஸ்ரீதரன், அவரது மனைவி சிவசங்கரி ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர். 

Sridharan

மூலவரை வழிபட்ட இவர்கள், உண்ணாமலை அம்மன் சன்னதியில் தரிசனம் செய்துள்ளனர். அப்போது கருவறை முன்பு நின்றுகொண்டு நகராமல் தரிசனம் செய்துள்ளனர். அப்போது வரிசையில் இருந்த பக்தர்கள் அம்மன் தரிசனம் செய்ய முடியாததால் கூச்சலிட்டுள்ளனர். இதனால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தேசூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் காந்திமதி பக்தர்களுக்கு இடையூறு செய்யாமல் ஓரமாக நின்று சாமி கும்பிடும் படி ஸ்ரீதரன், அவரது மனைவி சிவசங்கரி ஆகியோரிடம் கூறியுள்ளார். 

Annamalaiyar temple

நான் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ஜீவானந்தத்தின் தம்பி குடும்பத்தினர் என்றும் திருவண்ணாமலை நகராட்சியின் முன்னாள் தலைவர் என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய போது போலீஸ் சீருடையில் இருந்த பெண் காவலரை ஸ்ரீதரன் மனைவி சிவசங்கரி கன்னத்தில் பளாரென கன்னத்தில் அறைந்துள்ளார். 

dmk executive

ஆயிரக்கணக்கானவர்கள் முன்னிலையில் சீருடையில் இருந்த பெண் காவலரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களுக்கு ஆதரவாகக் கோயில் ஊழியர் ரமேஷ் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில்  அரசு அதிகாரியைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, பெண் வன்கொடுமை உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், அவரது மனைவி சிவசங்கரி, கோயில் ஊழியர் ரமேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

click me!