ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு: இந்தியாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு!

By Manikanda Prabu  |  First Published May 20, 2024, 6:01 PM IST

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இந்தியாவில் நாளை ஒரு நாள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படவுள்ளது


ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி நேற்று அண்டை நாடான அசர்பைஜான் சென்றார். அந்நாட்டில் புதிதாக கட்டப்பட்ட அணை திறப்பு விழாவிற்காக அவர் சென்றிருந்தார். அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் அதிபர் இப்ராஹிம் ரைசி மீண்டும் ஈரான் திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் உசைன் மற்றும் மூத்த அதிகாரிகளும் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.

அவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தின் ஜோல்பா நகர் அருகே பறந்து கொண்டிருந்தபோது திடீரென மாயமானது. தொடர்ந்து, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பும் துண்டிக்கப்பட்ட அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் சிக்கி ஹெலிகாப்டரில் பயணித்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் பயணித்த 9 பேரும் விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

undefined

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஊழியர்களுக்கு 8 மாத சம்பளம் போனஸ்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அசத்தல்!

இந்த நிலையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், நாளை ஒரு நாள் இந்தியாவில் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படவுள்ளது. “ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததையடுத்து, மறைந்த பிரமுகர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், மே 21ஆம் தேதி (நாளை) நாடு முழுவதும் ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. துக்க நாளில், நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அன்றைய தினம் உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகள் எதுவும் இருக்காது.” என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருந்தார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் டாக்டர் செயத் இப்ராஹிம் ரைசியின் மறைவு ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியும் அளிக்கிறது. இந்தியா-ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவு கூறப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் நிற்கிறது.” என பதிவிட்டிருந்தார்.

click me!