பனாரஸ் இந்து பல்கலைகழகத்தின் கோவாக்சின் தடுப்பூசி ஆய்வறிக்கைக்கு ஐசிஎம்ஆர் கண்டனம் தெரிவித்துள்ளது
கொரோனாவுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அந்த வகையில், இந்தியாவை பொறுத்தவரை கொரோனாவுக்கு ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து விநியோகித்த கோவாக்சின், புனே சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கிய கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளே பெரும்பாலானோருக்கு போடப்பட்டன. இந்த இரண்டு தடுப்பூசிகளும் தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்டு, பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டன. தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கியது.
இதில், கோவாக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனமானது ஐசிஎம்ஆர், தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தது. இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. அதேசமயம், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, COVID-19 தடுப்பூசியான “கோவிஷீல்ட்” (Covishield) மருந்தை, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், பன்னாட்டு மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவுடன் (AstraZeneca) இணைந்து தயாரித்தது.
undefined
இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல், ரத்தத் திட்டுகள் குறைவு போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம் என அந்த தடுப்பூசியை தயாரித்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இங்கிலாந்து நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசியால் உயிரிழப்புகளும் பக்க விளவுகளும் ஏற்படுவதாக சுமார் 51 பேர் பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில், பிரிட்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணத்தில் 'COVISHIELD' தடுப்பூசி, மிக அரிதாக TTS என்ற ரத்த உறைதல் பக்க விளைவை ஏற்படுத்தும் என்று AstraZeneca கூறியுள்ளது.
இந்தியாவில் சுமார் 174.94 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படலாம் என அந்த தடுப்பூசியை தயாரித்த அஸ்ட்ராஜெனெகா இங்கிலாந்து நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் பெரும்பாலானோருக்கு போடப்பட்ட மற்றொரு தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி குறித்த பனாரஸ் இந்து பல்கலைகழகம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில், கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் சுமார் 30 சதவீதம் பேர் பக்கவாதம், நரம்பியல் கோளாறு அல்லது மேல் சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட பாதகமான நிகழ்வுகளை அனுபவித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பனாரஸ் இந்து பல்கலைகழகத்தின் கோவாக்சின் தடுப்பூசி ஆய்வறிக்கைக்கு ஐசிஎம்ஆர் கண்டனம் தெரிவித்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசி குறித்த பனாரஸ் இந்து பல்கலைகழகத்தின் சமீபத்திய ஆய்விற்கு தங்களிடம் ஒப்புதல் எதுவும் பெறவில்லை என ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது.
சிறுபான்மையினருக்கு எதிராக ஒருபோதும் பேசவில்லை: பிரதமர் மோடி!
மேலும், இந்த ஆய்வு மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் சீரற்ற ஆய்வு முறைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ள ஐசிஎம்ஆர், ஆய்வு முடிவை திரும்ப பெற வேண்டும், ஆய்வு முடிவுகளில் தங்கள் பெயரை நீக்க வேண்டும், திரும்பப் பெறப்படாவிட்டால், சட்டரீதியாக மற்றும் நிர்வாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் சுமார் 30 சதவீத பேருக்கு கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக வெளியான அறிக்கை முற்றிலும் தவறானது என தெரிவித்துள்ள ஐசிஎம்ஆர், ஆய்வறிக்கையை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக, கோவாக்சின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என அதனை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது. கொரோனாவுக்கு போடப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படும் என அதனை தயாரித்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இங்கிலாந்து நிறுவனத்தில் கூறியதையடுத்து, கொரோனா தடுப்பூசிகள் தொடர்பான அச்சம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட நிலையில், தாங்கள் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என அதனை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.