ரூ.1 கோடி பரிசை பெற்ற சாலையோர வியாபாரி.. ஏமாற்ற நினைத்த லாட்டரி கடை உரிமையாளர்.. ஆனா நடந்ததே வேற

By Ramya s  |  First Published May 20, 2024, 1:34 PM IST

கேரளாவை சேர்ந்த மூதாட்டிக்கு லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு விழுந்த நிலையில், லாட்டரி கடை உரிமையாளர் அவரை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அருங்காட்சியகம் சந்திப்பு அருகே சுகுமாரியம்மா என்ற பெண்மணி சாலையோர கடை நடத்தி வருகிறார். துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்ற அவர்,தற்போது தனது சாலையோர கடை நடத்தி வருகிறார். 

தற்போது 72 வயதாகும் சுகுமாரியம்மா அடிக்கடி லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார். லாட்டரியில் பரிசு விழுந்தால் அதை வைத்து சொந்த வீடு கட்டிவிடலாம் என்ற ஆசையில் அடிக்கடி லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் கேரளா 50-50 லாட்டரி டிக்கெட்டை வாங்கி உள்ளார். 

Tap to resize

Latest Videos

12 டிக்கெட்களை செட் டிக்கெட்டாக ரூ.1200க்கு சுகுமாரியம்மா வாங்கி உள்ளார். இந்த நிலையில் கடந்த 15-ம் தேதி நடந்த குலுக்கலில் அவருக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. 

Weather Report: குமரி கடல் பகுதியில் தொடங்கியது தென் மேற்கு பருவமழை - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சுகுமாரியம்மாவிடம் இருந்த FG 348822 என்ற டிக்கெட்டிற்கு முதல் பரிசுத்தொகை கிடைத்தது. செட் டிக்கெட் என்பதால் ஆறுதல் பரிசும் அவருக்கு கிடைத்துள்ளது. ஆனால் லாட்டரி முடிவுகளை பார்க்காததால் சுகுமாரியம்மாவுக்கு தனக்கு முதல் பரிசு கிடைத்த விஷயம் தெரியவில்லை.

மேலும் அவரிடம் டிக்கெட்டை விற்ற கண்ணன் என்ற லாட்டரி விற்பனையாளர், உங்கள் டிக்கெட்டிற்கு ரூ.500 பரிசு விழுந்துள்ளது என்று கூறி மொத்த டிக்கெட்டையும் வாங்கி சென்றுள்ளார். 

ஆனால் சிறிது நேரத்தில் திரும்பி வந்த கண்ணன், தவறாக சொல்லியதாக கூறி ரூ.100 கொடுத்துவிட்டு எந்த பரிசும் விழவில்லை என்று கூறிவிட்டு சென்றுள்ளார். இதை தொடர்ந்து தனது ஊருக்கு சென்ற கண்ணன், தனக்கு லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு விழுந்துவிட்டது என்று கூறி இனிப்பு கொடுத்து கொண்டாடி உள்ளார்.

Narendra Modi: மூன்றாவது முறையாக மோடி பிரதமராவார்; ஆருடம் சொன்ன கோவை கோவில் காளை

கண்ணனுக்கு லாட்டரி விழுந்த விஷயத்தை மற்றொரு லாட்டரி விற்பனையாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் தனது நண்பரும், லாட்டரி கடை வைத்திருப்பவருமான பிரபா என்பவருக்கு இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

ஆனால் பிரபாவிற்கு சுகுமாரியம்மாவை நன்கு தெரியும். இதனால் அவரிடம் பிரபா விசாரித்துள்ளார். அப்போது தான் சுகுமாரியம்மா ஏமாற்றப்பட்ட விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனிடையே சுகுமாரியம்மாவிடம் லாட்டரியை ஏமாற்றி வாங்கி கண்ணன் தலைமறைவாகிவிட்டார். இதனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதை தொடர்ந்து சுகுமாரியம்மா லாட்டரி துறையிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதிகாரிகள் காவல்துறையில் புகாரளிக்க அறிவுறுத்தியதை அடுத்து அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் தலைமறைவாக இருந்த கண்ணனை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் தான் சுகுமாரியம்மாவை ஏமாற்றியதை அவர் ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த லாட்டரி டிக்கெட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த டிக்கெட்கள் 2 நாட்களில் சுகுமாரியம்மாவிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அதன்பின்னர் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

சுகுமாரியம்மாவுக்கு ஏற்கனவே ரூ.50,000, ரூ.60,000 பரிசு கிடைத்தாலும் தற்போது தான் முதன்முறையாக ரூ.1 கோடி பரிசு கிடைத்துள்ளதாம். சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதே தனது கனவு எனவும், தனக்கு விரைவில் பரிசுத்தொகை கிடைக்கும் என்று நம்புவதாகவும் சுகுமாரியம்மா கூறியுள்ளார். 
 

click me!