பெங்களூரு எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் நடந்த பார்ட்டி: போதை மாத்திரைகள், கொக்கைன் பறிமுதல்!

By Manikanda Prabu  |  First Published May 20, 2024, 2:02 PM IST

பெங்களூரு எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் நடந்த பார்ட்டியில் போதை மாத்திரைகள், கொக்கைன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்


கார்நாடக மாநிலத் தலைவர் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள பண்ணை வீட்டில் நடந்த பார்ட்டியின்போது, மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) போலீசாரின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் அங்கு திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, MDMA மாத்திரைகள் மற்றும் கொக்கைன் உள்ளிட்ட 45 கிராம் போதைப்பொருட்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக, அந்த பார்ட்டி ஒருங்கிணைப்பாளர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பார்ட்டியின்போது, அங்கிருந்த போதைப்பொருள் வியாபாரிகள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Tap to resize

Latest Videos

பண்ணை வீட்டில் நடந்த ரேவ் பார்ட்டியில் 71 ஆண்களும் 30 பெண்களும் என மொத்தம் சுமார் 101 பேர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. GR பண்ணை இல்லத்தில் நடைபெற்ற இந்த பார்ட்டியை ஹைதராபாத்தை சேர்ந்த வாசு என்பவர் ஏற்பாடு செய்திருந்தார். அதில், ஆந்திரப் பிரதேசம் மற்றும் பெங்களூரில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சூரிய அஸ்தமனம் முதல் சூரிய உதயம் வரை’ என நடைபெற்ற இந்த நிகழ்வானது மாலை 5 மணிக்குத் தொடங்கி காலை 6 மணி வரை நடைபெற்று வந்தது. இந்த பார்டியில் 25க்கும் மேற்பட்ட இளம்பெண்கள், டிஜேக்கள், மாடல்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒரு நாள் நிகழ்ச்சிக்காக சுமார் 30 முதல் 50 லட்சம் ரூபாய் வரை கணிசமான முதலீட்டில் ஆந்திராவில் இருந்து பார்ட்டிக்கான பங்கேற்பாளர்களை நிகழ்ச்சி ஏற்பாட்டளர் அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. பார்ட்டி நடந்த பண்ணை வீடு கான்கார்ட் நிறுவனத்தின் உரிமையாளரான கோபால ரெட்டிக்கு சொந்தமானது.

சோதனையின் போது, அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மெர்சிடிஸ் பென்ஸ் காரில் ஆந்திர எம்எல்ஏவின் பாஸ்போர்ட்டை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அந்த பாஸ்போர்ட் எம்எல்ஏ கக்கானி கோவர்த்தன ரெட்டிக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. கூடுதலாக, பென்ஸ், ஜாக்குவார், ஆடி உட்பட பதினைந்துக்கும் மேற்பட்ட உயர்ரக சொகுசு கார்கள் அந்த இடத்தில் இருந்ததாக சோதனைக்கு சென்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு: அடுத்து என்ன நடக்கும்? புதிய அதிபர் யார்?

ரேவ் பார்ட்டி சட்டப்பூர்வ நேரத்தை தாண்டி நடந்ததால் உள்ளே சென்று சோதனை நடத்திய கர்நாடக மாநில மத்திய குற்றப்பிரிவு போலீசார், போதைப்பொருள் மோப்ப நாய்களைக் கொண்டு அந்த வளாகம் முழுவதும் சோதனையிட்டனர். பிரபல DJக்களான RABZ, KAYVEE மற்றும் BLOODY MASCARA ஆகியோர் அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட அனைவரையும் அடையாளம் கண்டு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பார்ட்டி நடந்த இடத்தை ஆய்வு செய்து, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் விநியோக சங்கிலியை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

click me!