பிக்பாஸ் 13 வெற்றியாளர் சித்தார்த் சுக்லா, தொலைக்காட்சி தொடரான பாலிகா வடு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். 40 வயதே ஆகும் இவர் இன்று காலை மாரடைப்பால் மும்பையில் காலமானார்.
பிடிஐ தெரிவித்த அறிக்கையின்படி, அவர் தூங்குவதற்கு முன் சில மருந்துகளை உட்கொண்டதாகவும், பின்னர் காலையில் எழுந்திருக்கவில்லை. இதை தொடர்ந்து இவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மாரடைப்பு காரணமாக அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை உறுதி செய்தது.
இளம் நடிகர் சித்தார்த் சுக்லாவிற்கு, தாயார் ரீட்டா சுக்லா மற்றும் இரண்டு சகோதரிகள் உள்ளனர். தற்போது இவரது குடும்பத்தினர் சித்தார்த் சுக்லாவின் பிரேத பரிசோதனை நடத்தப்படும் கூப்பர் மருத்துவமனையில் உள்ளனர்.
டிவி நிகழ்ச்சிகளில் மட்டுமே பிரபலமான இவரை, பிக்பாஸ் நிகழ்ச்சி வெள்ளித்திரைக்கு கொண்டு சென்றது. அந்த வகையில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் இவரது பிரேத பரிசோதனை வரும் முன்னர், போலீஸ் வழக்கமான விசாரணையை அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடம் நடத்தி வருகிறார்கள். அப்போது மன அழுத்தத்தில் சித்தார்த் சுக்லா இருந்தாரா என்கிற கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் மன அழுத்தத்திற்கான மாத்திரை எடுத்து கொள்ளவில்லை என்றும், சத்து மாத்திரைகளை மட்டுமே இரவில் எடுத்து கொண்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.