குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் தெலுங்கில் ஆகிய மொழிகளில் அறிமுகமாகி, சிறந்த நடிப்புக்காக தேசிய விருதை பெற்று பிரபலமானவர் ஷாம்லி.
தமிழ் மற்றும் தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களுக்கு ஜோடியாக இவர் நடித்த அடுத்தடுத்த படங்கள் தோல்வியடைந்ததால், பட வாய்ப்புகள் கிடைக்காமல்... ஒரு நிலையில் திரையுலகில் இருந்தே முழுமையாக விலகினார்.
குறிப்பாக ஓவிய துறையில் மேதையான ஏ. வி. இளங்கோவின் வழிகாட்டலுடன் ஓவியம் வரைவதில் கவனம் செலுத்தினார். இந்தத் துறையில் இடைவிடாத பயிற்சி, விடாமுயற்சியோடு பல ஓவிய படைப்புகளை உருவாக்கினார் ஷாம்லி.
இவரது படைப்புகள் ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு பெங்களூரூவிலுள்ள சித்ரகலா பரிஷத் எனும் கலைக்கூடத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டில் சென்னையிலுள்ள வெண்பா கேலரி எனும் கலைக்கூடங்களில் இடம்பெற்றது.
இதை தொடர்ந்து தன்னுடைய ஓவிய படைப்புகளை அனைவரும் பார்வையிடும் விதமாகவும், விற்பனை செய்யும் விதமாகவும் 'ஷீ' என்கிற ஆர்ட் கேலரி ஒன்றை துவங்கியுள்ளார். இதில் ஷாலினி, அவரின் மகன் ஆத்விக், மகள் அனோஷ்கா உள்ளிட்ட அனைவருமே கலந்து கொண்டனர். அஜித் விடா முயற்சி படப்பிடிப்பில் உள்ளதால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.
மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர் மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம், ஆக்ஷன் கிங் அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.