பெண்களும் விரும்பும் கவர்ச்சி குயின்.. ”தமிழ்நாடு மெர்லின் மன்றோ” சில்க் ஸ்மிதா பிறந்தநாள் ஸ்பெஷல்!

First Published Dec 2, 2021, 11:10 AM IST

தன்னுடைய காந்த கண்களாலும், கவர்ச்சியாலும் ரசிகர்களை கட்டி போட்டவர் சில்க் ஸ்மிதா(Silk Sumitha). 1996 ஆம் ஆண்டு இவர் மறைந்தாலும் தற்போது வரை திரையுலகினரும், ரசிகர்களும் இவரது நினைவில் இருந்து வெளியே வரவில்லை. இவரை பற்றிய பிறந்தநாள் ஸ்பெஷல் புகைப்படங்கள் இதோ...

ஆந்திர பிரதேச மாநிலம் ஏலூரு பகுதியில், 1960 ஆம் ஆண்டு பிறந்தவர் தான் இந்த விஜயலட்சுமி. 1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக இவர் திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார்.

சில்க் ஸ்மிதாவை ஒரு நடிகையாக அறிமுகம் செய்தவர், பிரபல தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தி தான். தான் இயக்கிய 'வண்டிச்சக்கரம்' என்கிற திரைப்படத்தில் சிலுக்கு சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தை கொடுத்தார்.

அந்த படத்தில் வந்த பெயரே பின்னர் இவருக்கு சினிமாவில் நிலைத்துவிட்டது. இவரது 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 450ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ஆனதும், ஆங்கிலம் மற்றும் நடனமும் கற்று தன்னுடைய திறமையை மெருகேற்றி கொண்ட இவர்,   "இணையே தேடி" என்கிற திரைப்படம் மூலம் 1979இல் மலையாள திரைப்பட உலகிற்கு அறிமுகமானார்.

இவரது 'மூன்று முகம்' படத்தில் நடித்த கவர்ச்சியான, துணிச்சலான கதாபாத்திரம் இவரை தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய துறைகளிலும் புகழ்பெற செய்தது.

குறிப்பாக 1980களில் இவரது கவர்ச்சி நடனம் இடம்பெறாத தமிழ் திரைப்படங்களே இல்லை என்கிற அளவிற்கு திரையுலகைள உயர்ந்தார். முன்னணி நடிகர்கள் பலர் இவரது நடனம் தன்னுடைய படங்களில் வேண்டும் என்கிற அளவிற்கு சில்க் ஸ்மிதாவின் வளர்ச்சி இருந்தது.

கவர்ச்சியில் இருந்து சற்று விலகி...  அலைகள் ஓய்வதில்லை, நீங்கள் கேட்டவை, தாலாட்டு கேக்குதம்மா போன்ற திரைப்படங்களில் இவர் ஏற்று நடித்த குடும்ப பாங்கான நல்ல கதாபத்திரங்களின் மூலம் தனக்கு கவர்ச்சி மட்டுமின்றி அனைத்துவிதமான நடிப்பின் பரிணாமங்களும் வரும் என நிரூபித்தார் சில்க் ஸ்மிதா.

சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகள் மற்றும் பண இழப்பு காரணமாக 1996இல், சில்க் ஸ்மிதா சென்னையில் அவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்டது.

ஆனால் தற்போது வரை இவரது மரணத்திற்காக உண்மை காரணம் என்ன என்பது வெளியாக வில்லை. இவர் மறைந்து சுமார் 24 வருடங்கள் ஆன போதிலும் இவரது நினைவுகளும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்கவில்லை என்பது நிதர்சனம்.

click me!