மிக இளம் வயதில் ஒரு இந்திய வம்சாவளி வல்லரசு நாடான அமெரிக்காவின் பிரபலமான நகரில் மேயராக தேர்வானதற்கு ஜோஹ்ரான் மம்தானிக்கு இந்தியா முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்தன.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளி 34 வயதான ஜோஹ்ரான் மம்தானி மாபெரும் வெற்றி பெற்றார். 2 மில்லியன் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்ற நியூயார்க் நகரின் இளம் மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஜோஹ்ரான் மம்தானியின் தந்தை உகாண்டாவைச் சேர்ந்த எழுத்தாளர் மஹ்மூத் மம்தானி. தாய் இந்தியாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மீரா நாயர் ஆவார்.

ஜோஹ்ரான் மம்தானி கேரளாவை சேர்ந்தவரா?

மிக இளம் வயதில் ஒரு இந்திய வம்சாவளி வல்லரசு நாடான அமெரிக்காவின் பிரபலமான நகரில் மேயராக தேர்வானதற்கு ஜோஹ்ரான் மம்தானிக்கு இந்தியா முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்தன. மேலும் இந்தியாவில் அவர் சொந்த ஊர் எது? எந்த சமூகத்தை சேர்ந்தவர்? என ஒரு சிலர் தேட ஆரம்பித்தனர். அப்போது ஜோஹ்ரான் மம்தானியின் தாய் பெயர் மீரா நாயர் என்பதால் ஜோஹ்ரான் மம்தானியின் குடும்பத்தினர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பாலம் என்ற ஊர் தான் இவர்களின் பூர்விகம் என்றும் சிலர் சமூகவலைத்தளங்களில் பரப்பினர்.

கொண்டாடிய நாயர் சமூகத்தினர்

இதனைப்பார்த்த மலையாள மக்கள் பலர் ''நியூயார்க் நகர மேயர் எங்க மாநிலத்துக்காரர் தெரியுமா'' என்று கெத்தாக கூறி காலரை தூக்கி விட்டனர். மேலும் கேரளாவின் நாயர் சமூகத்தை சேர்ந்தவர்களும் ''நம்ம சமூகத்தை சேர்ந்தவர் உலக அரங்கில் பெரிய ஆளாக மின்னியுள்ளார்'' என்று சமூக வலைத்தளங்களில் புளகாங்கிதம் அடைந்தனர். ஆனால் பின்னர் ஜோஹ்ரான் மம்தானி பின்னணி குறித்து உண்மை தகவல் வெளியாக, அது கேரள நாயர்களை தூக்கி வாரிப்போட்டது.

கடைசியில் கிடைத்த ஏமாற்றம்

ஏனெனில் ஜோஹ்ரான் மம்தானி ஒரு மலையாளி நாயரே அல்ல. டெல்லியைச் சேர்ந்த அவரது தாத்தா, ஒரு பஞ்சாபி நாய்யர் (Nayyar)ஆவார். நாய்யர்கள் என்பவர்கள் பஞ்சாப்பைச் சேர்ந்த இந்து கத்ரி (Khatri) துணைச் சாதியினர் ஆவார்கள். இவர்கள் வணிகத்தில் சிறந்து விளங்கியவர்கள். ஆகவே ஜோஹ்ரான் மம்தானி கேரள நாயர் அல்ல. பஞ்சாபி நாய்யர். ஜோஹ்ரான் மம்தானியின் தாத்தா அறியப்படாத காரணங்களுக்காக தனது குடும்பப் பெயரை நாயர் என்று மாற்றியிருந்தார்.

குழப்பம் ஏற்பட்டது ஏன்?

இதனால் தான் மீரா நாயர் என்ற பெயரை பார்த்தவுடன் ஜோஹ்ரான் மம்தானி கேரள நாயர் என பலரும் நினைத்துக் கொண்டனர். அந்தச் சிறிய எழுத்து மாற்ற முடிவு, ஒரு மாநிலத்தையே ஏமாற்றியுள்ளது. கேரளாவில் நாயர்கள் என்பவர்கள் உயர்ந்த சமூக மக்களாக பார்க்கப்படுகின்றனர். அவர்கள் பெருமையுடன் தங்களைக் சத்திரியர்கள் என்று அழைத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.