ஜனநாயக சோசலிசவாதியான ஜோஹ்ரான் மம்தானி, நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் உலகப் புகழ்பெற்ற இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் மீரா நாயர் மற்றும் உகாண்டா கல்வியாளர் மஹ்மூத் மம்தானி ஆகியோரின் மகன் ஆவார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் புதிய மேயராக ஜோஹ்ரான் குவாமி மம்தானி இன்று (புதன்கிழமை) தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தேர்தலில், ஜனநாயக சோசலிசவாதியும், மாநில சட்டமன்ற உறுப்பினருமான மம்தானி, சுயேட்சையாகப் போட்டியிட்ட முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ மற்றும் குடியரசுக் கட்சியின் கர்டிஸ் ஸ்லிவா ஆகியோரைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.
ஜோஹ்ரான் மம்தானி நியூயார்க் நகரின் வரலாற்றிலேயே முதல் முஸ்லிம் மேயராகவும், மிக இளம் வயது மேயர்களில் ஒருவராகவும் உருவெடுத்துள்ளார். நியூயார்க் நகரின் 111-வது மேயராக அவர் ஜனவரி 1ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
ஜோஹ்ரான் மம்தானியின் பெற்றோர்
ஜோஹ்ரான் மம்தானியின் வெற்றிக்குப் பின்னால் அவரது பெற்றோர் குறித்த விவரங்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன. ஜோஹ்ரான் மம்தானி 1991ஆம் ஆண்டு உகாண்டாவின் கம்பாலாவில் பிறந்தார்.
இவரது தாய் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் மீரா நாயர். இவரது தந்தை உகாண்டாவைச் சேர்ந்த புகழ்பெற்ற கல்வியாளர் மஹ்மூத் மம்தானி.
மீரா நாயர்
1957 இல் ஒடிசாவின் ரூர்கேலாவில் பிறந்த மீரா நாயர், டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பயின்றவர். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி உதவித்தொகையுடன் பட்டம் பெற்றவர்.
மும்பையின் தெருக் குழந்தைகளின் வாழ்க்கையைப் பிரதிபலித்த அவரது முதல் திரைப்படம், 'சலாம் பாம்பே!' (1988) கேன்ஸ் திரைப்பட விழாவில் 'கேமரா டி'ஓர்' விருதையும், ஆஸ்கார் விருது பரிந்துரையையும் வென்றது.
அவரது நான்கு தசாப்த காலத் தொழில் வாழ்க்கை, எல்லைகளைக் கடந்து பேசும் கதைகளால் வரையறுக்கப்பட்டது. டென்சல் வாஷிங்டன் நடித்த 'மிசிசிப்பி மசாலா' (1991), ஒரு கறுப்பின அமெரிக்கருக்கும் இந்திய-உகாண்டா பெண்ணுக்கும் இடையிலான காதலைப் சித்தரித்து புதிய தளத்தை அடைந்தது.
வெனிஸ் திரைப்பட விழாவில் 'கோல்டன் லயன்' விருது வென்ற அவரது மாபெரும் வெற்றிப் படமான 'மான்சூன் வெட்டிங்' (2001), உலகளவில் மிகவும் பாராட்டப்பட்ட இந்தியப் படங்களில் ஒன்றாக இன்றும் திகழ்கிறது.
மீரா நாயர் அரசியல் ரீதியாகவும் வெளிப்படையானவர். 2013 ஆம் ஆண்டில், இஸ்ரேலுக்கு ஆதரவான அவரது நிலைப்பாடு பிடிக்காததால், ஹைஃபா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள மறுத்தவர்.
மஹ்மூத் மம்தானி
1946 இல் மும்பையில் பிறந்த மஹ்மூத் மம்தானி, கம்பாலாவில் வளர்ந்தவர். இவர் காலனித்துவம் மற்றும் அரசியல் வன்முறை குறித்த ஆப்பிரிக்காவின் மிகவும் செல்வாக்கு மிக்க அறிஞர்களில் ஒருவராவார்.
1972 இல், இவர் இளம் கல்வியாளராக இருந்தபோது, சர்வாதிகாரி இடி அமினால் உகாண்டாவிலிருந்து வெளியேற்றப்பட்ட 60,000 ஆசியர்களில் இவரும் ஒருவர். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு, தான்சானியா, தென்னாப்பிரிக்கா, உகாண்டா மற்றும் அமெரிக்கா முழுவதும் கற்பித்தவர். தற்போது கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.
மேலைநாடுகளின் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் சியோனிசம் பற்றிய தனது விமர்சனங்களுக்காக அவர் சர்ச்சைக்குள்ளானவர். காசா மீதான 2024 வளாகப் போராட்டங்களின்போது, மாணவர்களை இடைநீக்கம் செய்த கொலம்பியா பல்கலைக்கழகத்தின் நடவடிக்கையை அவர் பகிரங்கமாக கண்டித்தார்.
ஜோஹ்ரான் மம்தானியின் வெற்றி, நியூயார்க் நகரில் பன்முகத்தன்மைக்கும், புதிய தலைமுறைத் தலைமைக்கும் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
