டோர்ரே பச்சேகோவில் ஒரு போலி வீடியோ, வட ஆப்பிரிக்க குடியேறியவர்கள் மீதான தாக்குதலைத் தவறாகச் சித்தரித்து, இனவெறி கலவரத்தைத் தூண்டியது. இதனால் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென் ஸ்பெயினில் உள்ள டோர்ரே பச்சேகோ நகரம், ஒரு சமூக வலைத்தள வீடியோவால் சில நாட்களாகவே பெரும் கலவரத்தை சந்தித்து வருகிறது. இந்த வீடியோ, வட ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறியவர்கள் 68 வயதான உள்ளூர்வாசி ஒருவரைத் தாக்கியதாகத் தவறாகச் சித்தரித்துப் பரப்பப்பட்டது. இது வைரலாகி ஸ்பெயினில் ஆப்பிரிக்க குடியேறிகளுக்கு எதிரான இனவெறியாக வெடித்துள்ளது.
நடந்தது என்ன?
கடந்த புதன்கிழமை காலை, டோமிங்கோ தோமஸ் டொமிங்குஸ் என்ற 68 வயது முதியவர் தனது வழக்கமான நடைப்பயணத்தின் போது தாக்கப்பட்டார். அவரது காயம்பட்ட முகத்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. விரைவில், அவர்மீது தாக்குதல் நடத்தியவர்கள் என்று கூறி ஒரு போலியான வீடியோ பரவத் தொடங்கியது. இந்த வீடியோ சம்பவத்துடன் தொடர்பில்லாதது என காவல்துறை தெரிவித்த போதிலும், அது தீயாகப் பரவியது.
தாக்குதலுடன் தொடர்புடை மொரோக்கோ வம்சாவளியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை கைது செய்துவிட்டதாகவும் காவல்துறை உறுதிப்படுத்தியது. அவர்கள் மூவரும் டோர்ரே பச்சேகோவைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் அவர்களில் ஒருவர் பிரான்சுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது பிடிபட்டார் என்றும் போலீசார் கூறினர்.
சமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பிரச்சாரம்:
வீடியோ பரவிய சிறிது நேரத்திலேயே, தீவிர வலதுசாரி சமூக வலைத்தள குழுக்கள் வெறுக்கத்தக்க செய்திகளைப் பரப்பி, அனைத்து வட ஆப்பிரிக்கர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்தன. 'இவர்களை இப்போதே நாடு கடத்துங்கள்' என்ற ஒரு குழு வெளிப்படையாகவே பதிவிட்டது. ஆப்பிரிக்கர்களை 'வேட்டையாடுமாறு' மக்களைத் தூண்டும் பதிவுகளும் பரவின. வெள்ளிக்கிழமை இரவு, கையில் கம்புகளுடனும், மட்டைகளுடனும் பலர் கும்பல் கும்பலாக தெருக்களில் சுற்றித் திரிந்தனர்.
முகமூடியணிந்த இளைஞர்கள் பலர் கடைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். காவல்துறையினர் மீதும் பாட்டில்களை வீசியும் வாகனங்களைத் தாக்கியும் அட்டூழியம் செய்தனர். இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 14 பேரை ஸ்பானிஷ் காவல்துறை கைது செய்துள்ளதுடன், சட்ட ஒழுங்கை மீட்டெடுக்க 130 க்கும் மேற்பட்ட அதிகாரிகளைப் பணியில் அமர்த்தியுள்ளது.
அச்சத்தில் ஆப்பிரிக்க குடியேறிகள்:
20 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்து, விவசாயத் துறையில் அதிக அளவில் பணிபுரிந்து வரும் பல வட ஆப்பிரிக்க குடியேறிகள் இப்போது பாதுகாப்பாக உணரவில்லை எனக் கூறியுள்ளனர். இந்நிலையில், கலவரக்காரர்களை எதிர்கொள்வதைத் தவிர்த்து, தங்களது பாதுகாப்பிற்காக ஆப்பிரிக்க குடியேறிகள் வீட்டிலேயே இருக்குமாறு மேயர் பெட்ரோ ஏஞ்சல் ரோகா வலியுறுத்தியுள்ளார். மதத் தலைவர்களும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.
அரசியல் பழிவாங்கல்:
ஸ்பெயினின் உள்துறை அமைச்சர் பெர்னாண்டோ கிராண்டே-மார்லாஸ்கா, இந்த வெறுப்புணர்வு பரவியதற்கு வோக்ஸ் (Vox) கட்சியை குற்றம் சாட்டினார். வோக்ஸ் ஸ்பெயினின் மூன்றாவது பெரிய அரசியல் சக்தியாகும்.
வோக்ஸ் கட்சியின் தலைவர் சாண்டியாகோ அபாஸ்கல் இந்தக் கலவரத்தில் தங்களுக்குத் தொடர்பு இல்லை என்று மறுத்துள்ளார். ஆனால், அதிகப்படியான வெளிநாட்டினர் குடியேற்றம் அமைதியையும் செழிப்பையும் பறிக்கிறது எனக் குற்றம் சாட்டினார்.
இதனிடையே, மர்சியா பகுதியின் வோக்ஸ் கட்சி தலைவரான ஜோஸ் ஏஞ்சல் அன்டெலோ வெறுப்பைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அவர்மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
பிரதமர் பெட்ரோ சான்செஸ் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வன்முறையைக் கண்டித்து, "ஸ்பெயின் என்பது உரிமைகள் கொண்ட நாடு. வெறுப்பைப் பரப்புவது அல்ல... நாம் உறுதியாகச் செயல்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
டெலிகிராம் கணக்குகள் முடக்கம்:
மேலும் தாக்குதல்களை ஒழுங்கமைத்து, மற்ற நகரங்களில் இருந்து மக்களை கலவரத்தில் சேரத் தூண்டிய டெலிகிராம் குழுக்களையும் அதிகாரிகள் முடக்கியுள்ளனர். வெறுப்பைப் பரப்பியதற்காக வடகிழக்கு ஸ்பெயினின் மாடாரோவில் சிலர் கைது செய்யப்பட்டனர்.
