உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், மனித குலத்திற்கே பெரும் சவாலாக திகழ்கிறது. சீனாவில் உருவான கொரோனா, உலகம் முழுதும் வேகமாக பரவி, உலகளவில் 21 ஆயிரம் உயிர்களை பறித்துள்ளது. சீனா, இத்தாலி, ஸ்பெய்ன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. உலகம் முழுதும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 650 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், மக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுதலே அதிலிருந்து தப்பிப்பதற்கான வழி என்பதால், இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டுவருகிறது. 

ஊரடங்கில் இருப்பது, தனிமைப்படுவதெல்லாம் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான வழியே தவிர, அதை அழிப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

இதுகுறித்து பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கேப்ரியேசுஸ், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல நாடுகள் லாக் டவுனை அமல்படுத்தியுள்ளது. ஆனால் லாக்டவுன் நடவடிக்கை மட்டுமே கொரோனாவை ஒழிக்க போதுமானதல்ல. 

லாக்டவுன் செய்ய நாங்கள் தான் அறிவுறுத்தினோம். ஆனால் அதேநேரத்தில் லாக்டவுனால் மட்டும் தீர்வு காண முடியாது. இந்த லாக்டவுன் காலக்கட்டத்தை கொரோனாவை அழிக்க பயன்படுத்த வேண்டும். இந்த காலக்கட்டத்தை கொரோனாவை அழிக்க பயனுள்ள வகையில் நாம் பயன்படுத்த வேண்டும்.

ஊரடங்கை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள் இருக்க சொல்வது, சுகாதாரத்துறையின் மீதான அழுத்தத்தை குறைக்குமே தவிர வைரஸை அழிக்க முடியாது. எனவே சுகாதார பணியாளர்கள் மற்றும் பரிசோதனை மையங்களை அதிகரித்து கொரோனாவை ஒழிக்க தீவிரம் காட்ட வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர்களை பரிசோதிக்க வசதிகளை உருவாக்க வேண்டும். பாதிக்கப்பட்டோரிடம் இருந்து யாருக்கு நோய் வருகிறது என்பதை கண்டறிய தெளிவான திட்டம் தேவை. 

கொரோனா தொற்றுவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்தி பரிசோதித்து சிகிச்சை அளிக்கும் பணிகளையும் நடவடிக்கைகளையும் ஆக்ரோஷமாக பின்பற்ற வேண்டிய நேரம் இது. எனவே லாக்டவுனை பயன்படுத்தி கொரோனாவை அழிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.