பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக F-16 போர் விமானங்களை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்கா விதித்த கட்டுப்பாடுகள் மற்றும் இறுதி பயன்பாட்டு ஒப்பந்தங்கள் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. பாகிஸ்தான் F-16 விமானங்களை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
F -16 Jet: பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் வியாழக்கிழமை இரவு இஸ்லாமாபாத் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை ஏவியது. இந்தியா இந்த தாக்குதலை S 400 சுதர்சன சக்ரா கொண்டு வெற்றிகராமாக முறியடித்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக F-16 போர் விமானங்களை பயன்படுத்தியதாக தகவல் வெளியானது. ஆனால், இதற்கான ஆதாரங்கள் இன்னும் வெளியாகவில்லை. அப்படியே இருந்தாலும் இந்தியாவுக்கு எதிராக F-16 போர் விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பாகிஸ்தானின் ஜெட், ஏவுகணைகள், டிரோன் ஆகியவற்றை இந்தியா S 400 மூலம் சுட்டு வீழ்த்தியது. ஒரு விமானியும் பிடிபட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தனது F-16 போர் விமானங்களை பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால், இந்தியாவிற்கு எதிராக F-16 பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
அமெரிக்காவை மீறி F-16 போர் விமானங்கள் பாகிஸ்தான் பயன்படுத்த முடியுமா?
பாகிஸ்தானின் கடற்படையில் பயன்படுத்தப்படும் F-16 ஜெட் போர் விமானங்கள் அமெரிக்காவிலிருந்து வாங்கப்பட்டவை. இந்த விமானங்களை பயன்படுத்துவதற்கு அமெரிக்கா கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த போர் விமானங்கள் அமெரிக்க வெளிநாட்டு ராணுவ விற்பனை (FMS) திட்டத்தின் கீழ் விற்கப்பட்டன. அத்தகைய ஒவ்வொரு விற்பனையும் இறுதி பயன்பாட்டு கண்காணிப்பு (EUM) ஒப்பந்தத்தில் இணைக்கப்படுகிறது. அதாவது பாகிஸ்தான் ஒப்புதல் இல்லாமல் ஜெட் விமானங்களை சுதந்திரமாக பயன்படுத்தவோ அல்லது மாற்றியமைக்கவோ முடியாது.
கோல்டன் சென்ட் மற்றும் ப்ளூ லான்டர்ன் போன்ற திட்டங்களின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க அணிகளும் தரையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அவற்றின் வேலையே அமெரிக்க தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதுதான். இந்த அணிகள் ஜெட் விமானங்கள் மற்றும் ஆயுதங்களின் நிலைப்பாட்டை 24 மணி நேரமும் கண்காணிக்கின்றன.
F-16 அதிகாரப்பூர்வ விதிகள் என்ன?
இந்த ஒப்பந்தங்களின் கீழ், வாஷிங்டன் வெளிப்படையாக ஒப்புதல் அளிக்காவிட்டால், வழக்கமான போரில் F-16 அல்லது AIM-120 AMRAAM போன்ற அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்த பாகிஸ்தானுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போர் விமானத்தை மற்ற நாடுகளுக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது. பயங்கரவாதிகளுக்கு எதிராகத்தான் பயன்படுத்த வேண்டும். பாகிஸ்தானின் மேற்கில் இருக்கும் பழங்குடியின போராளி மக்களுக்கு எதிராக பயன்படுத்தலாம் என்று அமெரிக்கா கட்டளையிட்டுள்ளது.
2019 பாலகோட் வான்வழித் தாக்குதலில் என்ன நடந்தது?
2019 பாலகோட் வான்வழித் தாக்குதலின்போது, பாகிஸ்தான் F-16 ஒப்பந்தத்தை மீறியதாக அமெரிக்க அதிகாரிகளிடம் இந்தியா குற்றம்சாட்டி இருந்தது. 2019 ஆம் ஆண்டு பாலகோட் விமானத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் F-16 விமானங்களைப் பயன்படுத்தி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றது. அந்த நேரத்தில், இந்தியாவின் MiG 21 விமானம் அதை சுட்டு வீழ்த்தியது. F-16 விமானங்களைப் பயன்படுத்துவது குறித்து அமெரிக்காவிடம் இந்தியா புகார் அளித்திருந்தது. பின்னர் பாகிஸ்தான் விமானப்படைக்கு அமெரிக்கா கடிதம் எழுதியது. இருப்பினும், பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், அதே கடிதத்தில் அங்கீகரிக்கப்படாத இடங்களுக்கு F-16 நகர்த்தப்படுவதாக குற்றம்சாட்டி இருந்தது. இதில் இருந்து இந்த F-16 ஜெட் விமானத்தை தவறாக பாகிஸ்தான் பயன்படுத்தக் கூடாது என்பதில் அமெரிக்கா கவனமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தான் விதிகளை மீறினால் என்ன நடக்கும்?
பாகிஸ்தான் மீண்டும் F-16 விமானங்களை தவறாகப் பயன்படுத்தினால், அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் கருதப்படுகிறது. அதாவது, ஒப்பந்தத்தை துண்டிக்கலாம். அல்லது உதிரி பாகங்கள் தேவை இருக்கும்போது, சப்ளை செயவதற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவிக்கலாம். தற்போதும், பாகிஸ்தானை அமெரிக்கா கடுமையாக கண்காணித்து வருகிறது. எந்த சூழலிலும் இஸ்லாமாபாத் தவறு செய்யும்போது, நடவடிக்கை எடுக்க வாஷிங்டன் தயாராக இருக்கிறது.
இப்போது அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?
இந்தியாவிற்கு எதிராக F-16 விமானங்களை பயன்படுத்தக் கூடாது என்று அமெரிக்கா எங்கும் குறிப்பிடவில்லை என்றாலும், வாஷிங்டன் தனது எதிர்பார்ப்புகளில் கவனமாக இருக்கிறது. கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்குத்தான் இந்த விமானம் என்பதையும் அமெரிக்கா தெளிவுபடுத்தி இருந்தது.
பாகிஸ்தானிடம் எத்தனை F-16 விமானங்கள் உள்ளன?
பாகிஸ்தானிடம் சுமார் 75 முதல் 80, F-16 விமானங்கள் 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி சேவையில் இருந்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை செயல்பாட்டில் உள்ளன. ஆனால் அவற்றின் பயன்பாடு அமெரிக்காவின் கண்காணிப்பின் கீழ் உள்ளது.


