Russia-க்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா,சீனா, UAE நடுநிலை வகித்தது ஏன்.? ராஜதந்திர அரசியல்..!!
இந்தியா-சீன எல்லைப் பிரச்சனையில் இந்தியாவுக்கு ஆதரவாக ரஷ்யா நின்றது, கார்கில் போர் நேரத்தில் உடனடி தேவைக்கான ஆயுதங்களை ரஷ்யாவே இந்தியாவுக்கு வழங்கி உதவி செய்தது. இதனால் ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க முடியாத சூழ்நிலையில் உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் யுத்தம் நடத்தி வரும் நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து ரஷ்ய ராணுவம் உடனே நிபந்தனையின்றி திரும்ப்பெற வேண்டும் என்று அந்த தீர்மானம் வலியுறுத்தியுள்ளது. இத்தீர்மானத்தின் மீது ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இத்தாலி, நியூசிலாந்து, நார்வே, போலந்து, ருமேனியா, பிரிட்டன் உள்ளிட்ட 11 நாடுகள் ஆதரித்து வாக்களித்துள்ளன. ஆனால் இதில் சீனா, இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் விலகி நின்றுள்ளன, வாக்களிக்கவில்லை, (நடுநிலை வகிக்கின்றன) ஆனால் ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை தோற்கடித்துள்ளது. இதனால் அந்த தீர்மானம் நிறைவேற்ற முடியாமல் போனது. அதாவது இந்த பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது, அதில் நிரந்தர உறுப்பினரான ரஷ்யா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்திய தீர்மானத்தை ரத்து செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் இந்தியா சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரே மாதிரியான நிலைப்பாடு எடுக்க காரணம் என்ன.?
15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் அல்ல, இதேநேரத்தில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை, ரஷ்யா- உக்ரைன் விவகாரத்தில் தூதரக ரீதியில் தீர்வு காணவேண்டும் என்றும் இந்தியா தனது கருத்தை பதிவு செய்துள்ளது. எவ்வாறாயினும் அனைவரின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் நாம் மதிக்க வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது. இந்தியாவைப் போலவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சும் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அல்ல, எனவே அதுவும் வாக்களிப்பதில் இருந்து விலகிக்கொண்டது. பாதுகாப்பு கவுன்சிலின் வாக்கெடுப்பின் போது ரஷ்யாவுடன் அதிக நெருக்கம் காட்டும் சீனாவும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை, ஆனால் சீனா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக உள்ளது. ஆனாலும் வாக்கெடுப்பை சீனா தவிர்த்தது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்தியா வாக்களிப்பதை தவிர்த்த ஏன்.? இந்தியாவும், ரஷ்யாவும் பாரம்பரியமிக்க நீண்டகால நட்பு நாடுகள் ஆகும். இந்தியாவின் பாதுகாப்பு உபகரணங்கள் பாதிக்கும் மேற்பட்டவை ரஷ்யாவிடமிருந்து வரப்பெற்றவை. பல ஆண்டுகளாக ரஷ்யா இந்தியாவின் நம்பகமான நட்பு நாடாக இருந்து வருகிறது. இந்திய- சீன எல்லைப் பிரச்சினை, இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினைகளில் தொடர்ந்து இந்தியாவுக்கு ஆதரவாக ரஷ்யா நிலைப்பாடு எடுத்து வருகிறது. ஒருமுறை அமெரிக்கா தனது போர்க்கப்பலை பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் 1971ல் அமெரிக்கா நாசகர போர்க் கப்பலை மலாக்காவில் இருந்நு வங்காள விரிகுடாவுக்கு நகர்த்தியது அப்போது இந்தியாவுக்கு ஆதரவாக தனது போர்க்கப்பலை அனுப்பியது ரஷ்யா. அதன்பிறகே அமெரிக்கா தனது போர்க் கப்பலை திரும்பப் பெற்றது. இதேபோல் இந்திய- சீன எல்லைப் பிரச்சினை அல்லது இந்தியா- பாகிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்சினையில் ரஷ்யா தனது பாரபட்சமற்ற தன்மையை வெளிப்படுத்தி வருகிறது. காஷ்மீர் விவகாரம் இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு தரப்பு பிரச்சினை என ரஷ்யா கூறியுள்ளது.
ஆனால் அமெரிக்கா இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் இந்தியா-சீன எல்லைப் பிரச்சனையில் இந்தியாவுக்கு ஆதரவாக ரஷ்யா நின்றது, கார்கில் போர் நேரத்தில் உடனடி தேவைக்கான ஆயுதங்களை ரஷ்யாவே இந்தியாவுக்கு வழங்கி உதவி செய்தது. இதனால் ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க முடியாத சூழ்நிலையில் உள்ளது. ஆனால் அமெரிக்காவோ இந்தியா உக்ரைனுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் இந்தியாவைப் புறக்கணித்து நடுநிலை வகித்துள்ளது. அதே நேரத்தில் இந்தியா ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்களித்தால் அமெரிக்காவுடனான உறவும் மோசமடைய வாய்ப்பிருக்கிறது, கடந்த சில ஆண்டுகளாக இந்திய அமெரிக்க உறவு வலுபட்டுள்ளதே இதற்கு காரணம். அதேபோல் சீனாவுடனான இந்தியாவின் எல்லை பிரச்சினையில் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா பேசியது, இப்படிப்பட்ட சூழ்நிலையில் யாருக்கும் வாக்களிக்காமல் நடுநிலை வகிப்பது இந்தியாவுக்கு சாலச் சிறந்ததாக இருக்கும் என்பதால் இந்தியா நடுநிலை வகித்துள்ளது.
இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலையாக இருப்பதே சரி என்றே நிபுணர்களும் கருத்து கூறி வருகின்றனர். ஆனால் 2014ல் இதேபோன்ற ஒரு சம்பவத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா இருந்தது. ரஷ்ய ஆதரவு அரசாங்கத்துக்கு எதிராக உக்ரைனில் உள்நாட்டுப் போர் வெடித்தபோது ரஷ்யா உக்ரைணை தாக்கி உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது. கிரீமியாவில் பெரும்பாலானோர் ரஷ்ய மொழி பேசும் மக்கள் என்றும், அவர்களை பாதுகாப்பது அரசின் கடமை என்றும் ரஷ்யா கூறியது. கிரிமியா ரஷ்யாவுடன் இணைந்த பிறகு மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்தன. அப்போதும் ரஷ்யாவின் மீதான தடையை மன்மோகன் சிங் தலைமையிலான அரசு எதிர்த்தது. அதேபோல் 2020 ஆம் ஆண்டிலும் ரஷ்யாவுக்கு எதிரான உங்ரைனின் தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. அதாவது கிரீமியாவில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உக்ரைன் ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த நிலையில் அந்த தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. அதேபோல் இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் தொடர்ந்து உக்ரைன் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே நிலைபாடு எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. எனவே நீண்ட காலமாக இந்தியாவுக்கு உற்ற நண்பனாக இருந்து வரும் ரஷ்யாவை இந்தியா பகைத்துக்கொள்ள விரும்பவில்லை என்பதை இந்த நடுநிலை தன்மைக்கு காரணம்.
சீனா ரஷ்யாவின் நண்பன், அமெரிக்காவின் எதிரி, பிறகு ஏன் ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்களிக்க வில்லை.?
சமீபகாலமாக சீனா மற்றும் ரஷ்யா இடையே நட்புறவு பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் அமெரிக்காவுடனான சீனாவின் உறவு மோசமடைந்து வருகிறது ஆனாலும் சீனா- ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருப்பது, வாக்களிப்பதில் இருந்து விலகி இருப்பதும், அமெரிக்காவுக்கு கிடைத்த சிறிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஆனால் சில காலத்திற்கு முன்பு உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை தாக்குதல் என்று ஏற்க சீன மறுத்தது. ஆனால் சீனா தற்போது தனது நலனை கருத்தில் கொண்டே வாக்களிப்பதில் இருந்து விலகியுள்ளது. யாருக்காவது ஒருவருக்கு ஆதரவாக வாக்களிக்கும் பட்சத்தில் அது தேவையில்லாத பாதிப்புகளை உருவாக்கும், எனவே வேகமாக வளர்ந்து வரும் சீனப் பொருளாதாரத்திற்கு அது தடைக்கல்லாக அமையலாம், அதனால் சீனா இந்த விவகாரத்தில் நடுநிலை என்ற முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதேபோல் ரஷ்யாவை ஆதரித்தால் மேற்கத்திய சந்தைகளிலும் சீனாவின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம், அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடை விதித்துள்ளது. அதன் வங்கி அமைப்புகளையும் முடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நேரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனா வாக்களிப்பது தனது பொருளாதாரத்தை கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்பதால் சீனா இந்த விவகாரத்தில் தந்திரமாக நடுநிலைமை என்ற முடிவு எடுத்துள்ளது. 2014 ஆம் ஆண்டு கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வந்த போதும் சீனா வாக்களிப்பதில் இருந்து விலகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு எமிரேட் அமெரிக்காவிற்கு (உக்ரைனுக்கு) ஆதரவாக ஏன் வாக்களிக்கவில்லை வாக்களிப்பதில் இருந்தும் விலகியது ஏன்.?
அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான உறவு மிகவும் வலுவாக உள்ளது. வளைகுடா பகுதியில் ஏமன், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவுடன் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா போன்ற நாடுகள் இருந்து வருகின்றன. மறுபுறம் ரஷ்யாவுடனும் ஐக்கிய அரபு அமீரகத்தின் உறவு வலுவாக இருந்து வருகிறது. உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தியாளராக ரஷ்யா உள்ளது, அதேபோல் ஐக்கிய அரபு அமீரகமும் எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இருநாடுகளும் பொருளாதாரரீதியாக ஒன்றோடு ஒன்று இயைந்துள்ளன, எனவே உக்ரைன் பிரச்சினையில் அமெரிக்கா- ரஷ்யா ஆகிய இரு நாடுகளையும் பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதில் ஐக்கிய அரபு அமீரகம் தெளிவாக உள்ளது. இதனால் உக்ரைன் விவகாரத்தில் ராஜதந்திர ரீதியில் தீர்வு காணவேண்டும் என ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் யுஏஇ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.