கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடி தொடர்ந்து மிகப் பெரிய தவறுகளைச் செய்து வருகிறார் என்றும். இது நாட்டை மிகவும் பலவீனப்படுத்தி உள்ளது என்றும், சீனா ஏன் ஊடுருவ இந்த நேரத்தை தேர்வு செய்தது என்றும் ராகுல் காந்தி சரமாரியாக பாஜகவை விமர்சித்தும், கேள்வி எழுப்பியுமுள்ளார். கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன்-15ஆம் தேதி சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து நடத்திய தாக்குதலில், 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த தாக்குதல் நடத்தப்பட்டது முதல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மோடி மீதும், பாஜக மீதும் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். எல்லையில் பதற்றம் நீடித்த நிலையில் இந்திய-சீன எல்லையில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு வெளிப்படையாக மோடி அரசு தெரிவிக்க வேண்டும் எனவும், சீன ராணுவம் இந்தியாவிற்குள் ஊடுருவி விட்டதா என்பதை மோடி மறைக்காமல் மக்களுக்குச் சொல்ல வேண்டும் எனவும் ராகுல் காந்தி பிரதமரை கேள்விக்கணைகளால் துளைத்து வந்தார். இந்நிலையில் ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு எதிராக டிவிட்டரில் கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார். அதில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடி தொடர்ந்து தவறுமேல் தவறுசெய்து வருகிறார். அது உண்மையிலேயே நாட்டை பலவீனப்படுத்தி உள்ளது. 

அதனால் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.மேலும்  சீன விவகாரத்தில் முக்கியமாக மூன்று கேள்விகளை மத்திய அரசிடம் முன் வைத்துள்ளார். அதாவது, சீனா ஏன் இந்த நேரத்தை இந்திய எல்லையில் அத்துமீறுவதற்காக தேர்வு செய்தது. சீனா ஆக்ரோஷமாக நடந்து கொள்ள இந்தியா ஏன் வாய்ப்பு கொடுத்தது? இந்தியாவுக்கு எதிராக இந்த அளவுக்கு தைரியத்துடன் சீனா இறங்க காரணம் என்ன? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கூறியுள்ள அவர், நாட்டின் பாதுகாப்பு குறித்து புரிந்து கொள்ள நீங்கள் வெவ்வேறு பக்கங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். நாட்டின் பாதுகாப்பு எந்த ஒரு குறிப்பிட்ட புள்ளியை மட்டும் சார்ந்தது இல்லை, அது பல சக்திகளின் கலவையால் செய்யப்படுகிறது. வெளிநாட்டு உறவுகளால், அண்டை நாடுகளால், நாட்டின் பொருளாதாரம் மற்றும் பொது உணர்வுகளால் நாடு பாதுகாக்கப்படுகிறது. ஆனால் இந்த எல்லா துறைகளிலும் தற்போது இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. அதனாலேயே நாட்டுக்கு நெருக்கடிகள் அதிகரித்துள்ளது.  ஏன் நமது நாட்டின் வெளியுறவுத்துறை பலவீனம் அடைந்துள்ளன என கேள்வி எழுப்பியுள்ள ராகுல்காந்தி, வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரையில் உலகின் பல நாடுகளுடன் நமது உறவு முன்பு சிறப்பாக இருந்தது. 

முக்கியமாக அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளுடன்  நல்ல உறவுகளை மேம்படுத்தி வைத்திருந்தோம். இந்நாடுகள் அனைத்தும் இந்தியாவின் நட்பு நாடுகளாக இருந்தன. ஆனால் இன்று நமது வெளிநாட்டு உறவுகள் கடினமாக்கி விட்டன. அமெரிக்காவுடனான உறவு வணிக பரிவர்த்தனைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ரஷ்யாவுடனான உறவும் வழக்கத்திற்கு மாறாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகள் அர்த்தமற்றதாக உள்ளன. குறிப்பாக அண்டை நாடுகளுடனான உறவுகள் மோசமடைந்துள்ளது, நேபாளம் இதற்கு முன்பு நமது நெருங்கிய நண்பனாக இருந்தது, பூட்டான் மற்றும் இலங்கையும் நம்முடன் மிக நெருக்கமாக இருந்தன. பாகிஸ்தானை தவிர அனைத்து அண்டை நாடுகளுடனும் இணைந்து பணியாற்றிய இந்தியாவை அந்நாடுகள் சிறந்த ஒரு பங்காளியாக கருதினர். ஆனால் இன்று, நேபாளம்  நம் மீது கோபமாக இருக்கிறது, அந்நாட்டு மக்கள் நம் மீது கோபமாக உள்ளனர். இலங்கை கூட தன் துறைமுகத்தை சீனாவுக்கே கொடுத்தது, மாலத்தீவு, பூட்டான் நம் மீது வருத்தத்தில் உள்ளன. பல வழிகளில் நாம் நெருங்கிய வெளிநாட்டு பங்காளிகளுடனான உறவை இப்போது நாம் கெடுத்து வைத்துள்ளோம். பொருளாதாரத்திலும் நம் நாடு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.  50 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு மோசமான நிலையை இந்தியா சந்தித்தது இல்லை. 

உலகமே ஒரு காலத்தில் இந்தியாவின் பொருளாதாரத்தை விவாதித்தன, அப்போது நாம் அது குறித்து பெருமிதம் அடைந்தோம், ஆனால் தற்போதைய பொருளாதார நிலை 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலையில் உள்ளது. பொருளாதாரம் குறித்து தற்போதுள்ள அரசுக்கு எந்த கண்ணோட்டமும் இல்லை. பொருளாதாரம் முற்றிலும் பாழகிவிட்டது, வேலையின்மை அதிகமாகி விட்டது. இந்தியாவின் வலிமை திடீரென பலவீனமாக மாறி உள்ளது. இந்த அரசாங்கம் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை, எனவே பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் குறித்து அரசாங்கத்திற்கு பலமுறை நாங்கள் எச்சரித்தோம், ஆனால் எதுவுமே கேட்கப்படவில்லை. வணிகர்களை காப்பாற்ற அரசாங்கத்திடம் வலியுறுத்தினோம், ஆனால் அதை அவர்கள் செய்ய மறுக்கிறார்கள். இன்று நம் நாடு பொருளாதார நெருக்கடியில் உள்ளது, வெளியுறவுக் கொள்கை ஆபத்தில் உள்ளது, அண்டை நாடுகளுடனான உறவுகள் மோசமாகிவிட்டன, அதனால்தான் இந்தியாவுக்கு எதிராக சீனா தைரியமாக எல்லையில் அத்துமீற  இந்த நேரத்தை தேர்வு செய்தது என ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார்.