பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கவில்லை. சீனாவின் பொருளாதார நலன்கள் மற்றும் இந்தியாவுடனான உறவுகள் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவை விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தளவிற்கு பல ஆண்டுகளாக தொடர்ந்து உறவில் இருந்து வருகின்றனர். இந்த இரண்டு நாடுகளும் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. 

சீனாவின் 'இஸ்ரேல்' பாகிஸ்தான்:
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே விரிசல் இருந்தாலும், இரண்டு நாடுகளுக்கும் அண்டை நாடான சீனாவும், பாகிஸ்தானும் எப்போதும் நட்பு நாடுகளாக இருந்து வந்துள்ளன. முன்னாள் சீன ராணுவ அதிகாரி ஒருவர் பாகிஸ்தானை "சீனாவின் இஸ்ரேல்" என்று கூட அழைத்துள்ளார், இது ஒரு முறிக்க முடியாத கூட்டணி என்பதை இது காட்டுகிறது. ஆனால் சமீபத்திய பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றங்கள் வெடிக்கும் நிலையில், ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது? பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ தாக்குதலைத் தொடங்கினால் சீனா உண்மையிலேயே பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிற்குமா? அல்லது பீஜிங்கின் பாகிஸ்தானுக்கான ஆதரவை நடுநிலையுடன் அமைதி காக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐநாவில் உள்குத்து வேலை செய்த சீனா:
பஹல்காமில் நடந்த தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக இந்தியா குற்றம் சாட்டுகிறது, அதே நேரத்தில் பாகிஸ்தான் குற்றச்சாட்டுகளை மறுத்து சீனாவின் ஆதரவை நம்பியுள்ளது. இருப்பினும், சீனாவின் பதில் எச்சரிக்கையாக உள்ளது. வெளியுறவு அமைச்சர் வாங் யி இரு நாடுகளையும் "அமைதியாக இருக்க" வலியுறுத்திஉள்ளார். அதே நேரத்தில் தாக்குதல் குறித்த ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையை நீர்த்துப்போகச் செய்ய சீனா பாகிஸ்தானுடன் அமைதியாக செயல்பட்டது. 2019 புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு ஐ.நா. பாதுகாப்பு சபையின் கடுமையான கண்டனத்தைப் போலல்லாமல், இந்த முறை இந்தியாவின் விசாரணையை முழுமையாக ஐநா ஆதரிப்பதாக தெரியவில்லை. மேலோட்டமாகப் பார்த்தால், சீனா பாகிஸ்தானின் ஆதரவைப் பெற்றிருப்பது போல் தெரிகிறது. 

பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர்

பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர், பஹல்காம் தாக்குதலை ஒரு தந்திர நடவடிக்கையாக கருதியிருக்கலாம். மோசமான பொருளாதாரம், சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மற்றும் ராணுவத்தின் அரசியல் பிடிக்கு எதிராக அதிகரித்து வரும் பொதுமக்களின் கோபம் ஆகியவற்றுடன் இஸ்லாமாபாத் போராடி வருகிறது. காஷ்மீரில் பிரச்சனையை கிளப்புவது நாட்டை திசைதிருப்பவும் ஆதரவைத் திரட்டவும் வழிவகுக்கும் என்று பாகிஸ்தான் கருதி இருக்கலாம். தற்போது உலகமே காசா, உக்ரைன் மற்றும் தைவான் மீது கவனம் செலுத்தி வருகின்றன. உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதற்காகக் கூட பஹல்காமில் தாக்குதலில் ஈடுபட்டு இருக்கலாம்.

சீனாவின் நிலைப்பாடு என்ன?
ஆனால், பாகிஸ்தான் இன்னும் பழைய நிகழ்வுகளுக்குள் ஊறி கிடக்கிறது. உலகம் வேறு மாதிரியான ராஜதந்திர யுத்திகளை மேற்கொண்டு வருகின்றன. போர் வேண்டாம், பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று கவனம் செலுத்துகின்றன. சீனாவின் முன்னுரிமைகளும் மாறிவிட்டன. நிபந்தனையற்ற சீன ஆதரவைப் பெறலாம் என்று பாகிஸ்தான் நம்பி வருகிறது. ஆனால், இந்தியாவுக்கு அதிக ஏற்றுமதிகளை செய்து வரும் சீனா நடுநிலை வகித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

சீனாவின் மூன்று தந்திரங்கள் என்ன?
பாகிஸ்தான், சீனா உறவு மூன்று முக்கிய அம்சங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆப்கானிஸ்தானை எளிதாக பாகிஸ்தான் வழியாக அணுக வேண்டும், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC), இந்தியாவின் எழுச்சியை எதிர்கொள்ள பாகிஸ்தானைப் பயன்படுத்துதல் ஆகியவை ஆகும்.

சீனாவின் காபூல் தந்திரம்:
தாலிபானுடனான உறவுகளை வழிநடத்த சீனா ஒரு காலத்தில் பாகிஸ்தானை நம்பியிருந்தது. ஆனால் பெய்ஜிங் அதன் பின்னர் இஸ்லாமாபாத்தை ஓரங்கட்டி காபூலுடன் நேரடி உறவுகளை உருவாக்கியுள்ளது. சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முதன்மைத் திட்டமான CPEC பின்தங்கியுள்ளது. ஒரு காலத்தில் துபாய்க்கு போட்டியாக கருதப்பட்ட குவாதர் துறைமுகம், வளர்ச்சியடையாமல் உள்ளது. பாகிஸ்தான் நாட்டுக்குள் அமைதியின்மை, ஊதியம் பெறாத தொழிலாளர்கள் என வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. சீனா உலகளவில் தனக்கு போட்டியாக முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவை முந்த வேண்டும் என்று பல்வேறு அதிரடி பொருளாதார நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு இருக்கிறது.

பாகிஸ்தான் பார்த்து சீனா ஏன் பயப்படுகிறது?
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் பங்கு ஆபத்தாகி வருகிறது. பாகிஸ்தானின் வளர்ந்து வரும் உறுதியற்ற தன்மை, ராணுவ ஆதிக்கம் மற்றும் அதன் பாதுகாப்புப் படைகளுக்கும் ஜிஹாதி குழுக்களுக்கும் இடையிலான உறவுகள் பெய்ஜிங்கை கவலையடையச் செய்கின்றன. பாகிஸ்தானில் நிலவும் குழப்பம், இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்கி வரும் தனது ஜின்ஜியாங் பிராந்தியத்திலும் பரவக்கூடும் என்று சீனா அஞ்சுகிறது. சீனாவைப் பொறுத்தவரை, ஒரு நிலையான இந்தியா, கணிக்க முடியாத பாகிஸ்தானை விட அதிக மதிப்பு வாய்ந்ததாக பார்க்கத் துவங்கியுள்ளது. 

வரலாற்றிலிருந்து படிப்பினைகள்
1971 ஆம் ஆண்டில், வங்கதேசம் உருவாக்கத்திற்கு வழிவகுத்த இந்திய-பாகிஸ்தான் போரின் போது, ​​சீனா ராணுவ ரீதியாக தலையிடும் என்று பாகிஸ்தான் எதிர்பார்த்தது. அந்த உதவி ஒருபோதும் கிடைக்கவில்லை. பாகிஸ்தானின் *டான்* செய்தித்தாளில் 1972 ஆம் ஆண்டு தலையங்கம் இந்த தவறை ஒப்புக்கொண்டது. பல ஆண்டுகளுக்கு பின்னரும் பாகிஸ்தானை வைத்து தனது பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ளத்தான் பீஜிங் முயற்சித்து வருகிறது. 

சீனாவின் தயக்கம் ஏன்? 
உள்நாட்டில், அதிபர் ஜி ஜின்பிங் பல சவால்களை எதிர்கொள்கிறார். மக்கள் விடுதலை ராணுவத்தில் அவர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கையால், சீனாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணைப் படைகளின் தலைவர்கள் உட்பட 12க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகளை நீக்கியுள்ளது. அவர்கள் ராணுவத்தின் மீது நம்பிக்கையை இழந்துள்ளனர். அமெரிக்காவுடனான வர்த்தகப் போர், வளர்ச்சி மந்தநிலை மற்றும் பலவீனமான நுகர்வோர் நம்பிக்கை ஆகியவற்றால் சீனாவின் பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது. 2027 கட்சி மாநாட்டிற்கு முன்னதாக அதிகாரத்தை ஒருங்கிணைப்பதிலும் ஜி ஜின்பிங் கவனம் செலுத்துகிறார்.

சீனாவின் கவனம் எங்கே?
சீனா தைவான், தென் சீனக் கடல் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பொருளாதார உறவுகளில் அக்கறை செலுத்தி வருகிறது. இந்தியாவை எதிர்கொள்வது முக்கியமாக இருந்தாலும், குறிப்பாக 2020 லடாக் மோதலுக்குப் பிறகு, புதுடெல்லியுடன் பதற்றங்களைத் தணிப்பதில் பெய்ஜிங் கவனம் செலுத்தி வருகிறது. உலக முன்னணி பொருளாதார பாட்டியலில் இந்தியா முக்கியத்துவம் பெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தியாவை பகைத்துக் கொள்ள சீனா விரும்பவில்லை.

ராணுவத்தில் பலம் பொருந்திய இந்தியா:
பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னரும் இந்தியா அமைதியாக அதே நேரம் கடுமையான தடைகளை பாகிஸ்தானுக்கு விதித்து வருகிறது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பதற்கு ஆயுதப்படைகளுக்கு பிரதமர் மோடி முழு சுதந்திரம் வழங்கியுள்ளார். சிந்து நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. ஒப்பந்தம் கையெழுத்தானத்தில் இருந்து முதல் முறையாக ஒரு தெளிவான செய்தியை இஸ்லாமாபாத்துக்கு புதுடெல்லி அனுப்பியது. சிறந்த பாரம்பரிய படைகள் மற்றும் பெரிய பாதுகாப்பு பட்ஜெட்டுடன், பாகிஸ்தானை விட இந்தியா ராணுவ ரீதியாக முன்னணியில் உள்ளது. மாறி பொருளாதாரத்தில் தான் சீனாவும் கவனம் செலுத்தும். இல்லை என்றால், உள்நாட்டு பிரச்சனையால் பல்வேறு அரசியல் நெருக்கடிகளை சந்திக்க வேண்டும் என்பதை அதிபர் ஜி ஜின்பிங் உணராமல் இல்லை.