ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருத்து பரிசோதனைக்கு அனுமதி..!! உலக சுகாதார நிறுவனம் அதிரடி..!!
இந்நிலையில் கொரோனா இறப்பு விகிதத் தகவலை ஆய்வு செய்ததை வைத்து பார்த்ததன் அடிப்படையில், குழு உறுப்பினர்கள் சோதனை நெறிமுறையை மாற்ற எந்த காரணங்களும் இல்லை என்று பரிந்துரைத்தனர்.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்ற மலேரியா மாத்திரை கொரோனா சிகிச்சைக்கு உகந்தது அல்ல, அது அதிக அளவில் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது எனக்கூறி அந்த மாத்திரைகளுக்கான மருத்தவ பரிசோதனைகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அதற்கான சோதனைகளை தொடங்கலாம் என உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் வைரஸ் அமெரிக்காவில் தீவிரமடைந்தபோது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை பரிந்துரை செய்தார். இந்த மாத்திரைகள் " சூப்பர் மேஜிக் மாத்திரைகள் " என குறிப்பிட்ட அதிபர் ட்ரம்ப், இந்தியாவிடம் இருந்து அதிக அளவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை கொள்முதல் செய்தார்.
இந்த மாத்திரைகள் அதிக அளவில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதால் உலகின் பல்வேறு நாடுகளும் தங்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாதிரிகளை அனுப்பி வைக்க வேண்டுமென இந்தியாவிடம் கோரின. அதைத்தொடர்ந்து இந்தியாவும் பல்வேறு நாடுகளுக்கு மாத்திரைகளை அனுப்பி வைத்தது. இந்த மாத்திரை துவக்கத்தில் நோயாளிகளுக்கு நல்ல பலனை கொடுப்பதாக கூறப்பட்ட நிலையில் திடீரென அமெரிக்க பொது சுகாதாரத்துறை மருத்துவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த மாத்திரைகள் கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிராக செயல்படுகிறது என்பதற்கு இதுவரை எந்த அறிவியல்பூர்வ ஆதாரங்களும் இல்லை எனக் கூறினர். மேலும், லான்சட் மருத்துவ ஆய்விதழ் வெளியிட்ட ஆய்வு முடிவுகளின் படி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பாதுகாப்பானதல்ல என்றும், இந்த மாத்திரைகள் நோயாளிகளுக்கு இருதயநோய் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும், பார்வை கோளாறு, நரம்புத்தளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்தது.
மேலும், இந்த மாத்திரையை உட்கொண்டதால் பல நோயாளிகள் உயிரிழந்ததாகவும், இது எந்த வகையிலும் கொரோனா நோயாளிகளை குணப்படுத்த வில்லை என்றும் கூறியது. அதைத் தொடர்ந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை மருத்துவ பரிசோதனை செய்வது பாதுகாப்புக்கு உகந்தது அல்ல எனக்கருதி அந்த மாத்திரைகளை மருத்துவ பரிசோதனை செய்வதை நிறுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில் கொரோனா இறப்பு விகிதத் தகவலை ஆய்வு செய்ததை வைத்து பார்த்ததன் அடிப்படையில், குழு உறுப்பினர்கள் சோதனை நெறிமுறையை மாற்ற எந்த காரணங்களும் இல்லை என்று பரிந்துரைத்தனர், ஆதலால் உலக சுகாதார தொற்று பாதுகாப்பு கண்காணிப்பு குழு, மீண்டும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என அனுமதித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியோசஸ் தெரிவித்துள்ளார்.