கத்தோலிக்க திருச்சபை மதத் தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். அவர் யார்? அடுத்த போப் யார்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம். 

Pope Francis Dies Due to ill Health: கத்தோலிக்க திருச்சபை மதத் தலைவரும், வாடிகன் தலைவருமான போப் பிரான்சிஸ் இன்று காலமானார். உடல்நிலைக்குறைவு காரணமாக போப் பிரான்சிஸ் இன்று வாடிகன் இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. நிமோனியாவால் பாதிக்கப்பட்ட 88 வயதானா போப் பிரான்சிஸ் கடந்த மார்ச் மாதம் ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

போப் பிரான்சிஸ் மரணம் 

கடந்த 38 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் அதன்பிறகு வாடிகன் இல்லத்துக்கு திரும்பினார். நிமோனியா மற்றும் சிக்கலான நுரையீரல் தொற்று காரணமாக போப் பிரான்சிஸ் காலமாகி இருக்கிறார். சிகிச்சை முடிந்து பிரார்த்தனைகளில் கலந்து கொண்டிருந்த போப் பிரான்சிஸ் நேற்று ஈஸ்டரை ஓட்டி வாடிகனில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டிருந்தார். மக்களுக்கு ஆசி வழங்கி இருந்தார். 

யார் இந்த போப் பிரான்சிஸ் 

போப் பிரான்சிஸ் அர்ஜெண்டினாவில் பியுனோஸ் அயனஸ் நகரில் 1936ம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் ஜார்ஜ் மரியோ பெர்க்கலியோ. 2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி கத்தோலிக்க திருச்சபை மதத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். சுமார் 12 ஆண்டுகளாக இந்த பொறுப்பில் இருந்திருக்கிறார். லத்தீன் அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் திருத்தந்தை போப் பிரான்சிஸ் தான். 

20 வயதிலேயே உடல்நிலை பிரச்சனை 

போப் பிரான்சிஸ்சுக்கு 20 வயதிலேயே pleurisy என்ற அழற்சியால் நுரையீரலின் ஒருபகுதி அகற்றப்பட்டது. ஆனால் உடல்நிலை பாதிப்பு இருந்தபோதிலும் படிப்பு மீது தீரா காதல் கொண்ட அவர் வேதியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். கிறிஸ்தவ மதத்தின் மீது மிகுந்த ஈர்ப்பு கொண்ட போப் பிரான்சிஸ் 1958ம் ஆண்டு இயேசு சபையில் இணைந்தார். இதன்பிறகு யூனஸ் அயர்ஸ் உயர்மறைமாவட்டத்தின் பேராயராக பணிபுரிந்து இந்த மிகப்பெரிய நிலையை போப் பிரான்சிஸ் எட்டியுள்ளார்.

எளிமையை தேர்ந்தெடுத்தார்

போப் பிரான்சிஸ்க்கு தனி பங்களா, கார், அவருக்கு சமையல் செய்ய உதவியாளர்கள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் ஆடம்பரத்தை விரும்பாத போப் பிரான்சிஸ் பெரிய மாளிகையை வேண்டாம் என தவிர்த்து எளிமையாக சிறிய கட்டடத்திலேயே வசித்து வந்தார். இதேபோல் காரையும் வேண்டாம் என ஒதுக்கி பொது போக்குவரத்தையே அதிகம் பயன்படுத்தினார். மேலும் தனக்கான உணவை தானே சமைத்து எளிமையின் மறுஉருவமாக வாழ்ந்துள்ளார்.

போப் பிரான்சிஸ் காலமானார்: வாடிகன் சேனலில் அதிகாரபூர்வ அறிவிப்பு

போர்களை விரும்பாத மதத் தலைவர் 

உலகம் முழுவதும் போர்கள் நடைபெறாமல் அமைதி நிலவ வேண்டும் என்பதில் போப் பிரான்சிஸ் உறுதியாக இருந்து வந்தார். ரஷ்யா, உக்ரைன் போர், இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்பினார். போரினால் பாலஸ்தீனத்தின் காசாவில் குழந்தைகள், பெண்கள் உயிரிழந்தபோது தனது கவலையை வெளிப்படுத்தி இருந்தார். போப் பிரான்சிஸின் மறைவையொட்டி உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கவலை அடைந்தனர். 

அடுத்த போப் யார்?

போப் பிராசின்ஸ் மறைவையொட்டி அடுத்த போப் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. போப்பின் மரணம் அல்லது ராஜினாமாவுக்குப் பிறகு கார்டினல்கள் மத்தியில் இருந்து அடுத்த போப் தேர்வு செய்யப்படுவார். அதாவது போப்பின் நெருங்கிய ஆலோசகர்களான கார்டினல்களில் ஒருவரே அடுத்த போப் ஆக மாறுவார். போப் கத்தோலிக்க திருச்சபையின் உச்ச மதத் தலைவராகக் கருதப்படுகிறார். அவர் எடுக்கும் முடிவுகளை உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான கத்தோலிக்கர்கள் பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ராணுவ ரகசியம் கசிவு; சிக்னல் குரூப் மூலம் பரப்பிய அமெரிக்க அதிகாரி!