ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் காலமானார். இந்த அறிவிப்பை வாடிகன் கமெர்லெங்கோ வெளியிட்டதாக அசோசியேட்டட் பிரஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் காலமானார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வாடிகன் டிவி சேனல் வெளியிட்டுள்ளது.
"இன்று காலை 7:35 மணிக்கு, ரோம் பிஷப் பிரான்சிஸ், தந்தையின் வீட்டிற்குத் திரும்பினார். அவரது முழு வாழ்க்கையும் இறைவனுக்கும் அவரது திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது," என்று வாடிகன் கமெர்லெங்கோ கார்டினல் கெவின் ஃபெரெல் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
வரலாறு படைத்த போப் ஆண்டவர்:
அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் பிறந்த ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ, 2013ஆம் ஆண்டு போப் பிரான்சிஸாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜேசுட் இயேசு சபையைச் சேர்ந்த முதல் போப் ஆண்டவர், அமெரிக்காவிலிருந்து வந்த முதல் போப் ஆண்டவர், 1200 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக தேர்வான ஐரோப்பியரல்லாத போப் ஆண்டவர் என பல பெருமைகளைப் பெற்றார்.
முற்போக்கான கருத்துக்கள் கொண்டவராகவும், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு அளிப்பவராகவும் அறியப்பட்டார். வாடிகனிலும் சீர்திருத்தங்கள் கொண்டுவந்த போப் பிரான்சிஸ், கத்தோலிக்க திருச்சபைக்கு உள்ளேயும் அதற்கு அப்பாலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தலைவராக மதிக்கப்பட்டார்.
Pope Francis: போர் இல்லா உலகத்தை விரும்பிய சமாதான புறா! யார் இந்த போப் பிரான்சிஸ்? அடுத்த போப் யார்?
அனைவரையும் அரவணைத்தவர்:
பத்து ஆண்டுகளுக்கும் மேலான தனது போப் ஆண்டவர் பதவியில், அவர் மதங்களுக்கு இடையேயான உரையாடலை ஆதரித்தார். காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கை குறித்து வலுவான நிலைப்பாடுகளை எடுத்தார். அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் உரிமைகளுக்காக வாதிட்டார். திருச்சபைக்குள் பழமைவாத தரப்பினரின் எதிர்ப்பை எதிர்கொண்ட போதிலும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் கருணை உள்ளம் கொண்டவராக இருந்தார்.
போப் ஆண்டவர் மறைவைத் தொடர்ந்து, கமெர்லெங்கோவாகப் பணியாற்றி வரும் கார்டினல் கெவின் ஃபாரெல் சர்ச் விவகாரங்களைக் கவனித்துகொள்வார்.
உலகளாவிய தலைவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் கோடிக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் போப் ஆண்டவர்களுகுக அஞ்சலிகள் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு போப் ஆண்டவரைக் கௌரவிக்கும் வகையில் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்களை வாடிகன் விரைவில் வெளியிடும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை கண்டித்த போப் பிரான்சிஸ்.. உலகமே திரும்பி பார்க்க வைத்த சம்பவம்
