கொரோனா வைரசிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைத்து  தரப்பினரும் முகக்கவசம்  அணிவது அவசியம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. முகக் கவசம் அணிவது மட்டுமின்றி சமூக இடைவெளியை கடைபிடித்தால் மட்டுமே நோய்த் தொற்றை தடுக்க முடியும் என்று அந்நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம்  வலியுறுத்தியுள்ளார். உலகம் முழுவதும் கொரொனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, சர்வதேச அளவில் இதுவரை இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 லட்சத்து 51 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 98 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, ஸ்பெயின், பிரிட்டன், இந்தியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 65 ஆயிரத்து 708 ஆக உயர்ந்துள்ளது.

அங்கு மட்டும் இதுவரை ஒரு லட்சத்து  11 ஆயிரத்து  390 பேர் உயிரிழந்துள்ளனர், இந்த வைரஸை கட்டுப்படுத்த  உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன, ஆனாலும் வைரஸ் கட்டுக்கடங்காமல் தொடர்ந்து மக்களை கொத்துக் கொத்தாக தாக்கி வருகிறது. தற்போது தெற்காசிய நாடுகளில் இந்த வைரஸ் தாக்கம் தீவிரமடைந்துள்ளது, குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் மக்கள் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதுவரை கொரோனா வைரஸ் பட்டியலில் பத்தாவது இடத்தில்  இருந்த இந்தியா கடந்த ஓரிரு வாரத்தில் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நாளொன்றுக்கு குறைந்தது 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகிவருகின்றனர். இதே நிலைமையே பாகிஸ்தானிலும் உள்ளது. அதிக மக்கள் தொகையும், கூட்ட நெரிசலும் இந்தியா,பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வைரஸ் வேகமாக பரவ காரணமாக உள்ளது, ஆனால் மற்ற நாடுகளை ஓப்பிடுகையில் இந்தியாவில் வைரஸ் பரவல் வேகம் குறைவுதான், இருந்தாலும் அந்நாடுகள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. 

இந்நிலையில் ஒரு பிரத்தியேக தடுப்பூசி வந்தால் மட்டுமே இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர், உலகமே தடுப்புசியை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில் உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது, இந்நிலையில் அந்நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் அது குறித்து விளக்கியதாவது:-  பல்வேறு உலக நாடுகளில்  இந்த வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், மருத்துவமனைக்களில் கொரொனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள்  மட்டுமின்றி அனைத்து வகையான சுகாதார பணியாளர்களும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், மேலும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்தாகவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். உதாரணத்திற்கு வணிக வளாகங்களுக்கும் அல்லது பொதுப் போக்குவரத்துக்களை  பயன்படுத்தும் போதும் முகக்கவசம்  அவசியம் என கூறியுள்ளார். 

அவர்கள் அணியக்கூடிய முகக் கவசங்கள் மூன்று வகையான துணி அடுக்குகளால் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார், வெறுமனே முகக்கவசத்தை அணிந்தால் மட்டும் போதாது, பொது இடங்களில் போதிய சமூக இடைவெளியை கடைப்பிடித்தே ஆக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  நோய் பரவலை மையமாகக் கொண்டு நடத்தப்படும் ஆராய்ச்சி தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.