Asianet News TamilAsianet News Tamil

லெபனானுடன் இஸ்ரேலுக்கு என்ன பிரச்சனை? பேஜர், வாக்கி டாக்கி குண்டுவெடிப்பு எப்படி நடத்தப்பட்டது?

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் வெடித்து, பலர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஹிஸ்புல்லா குற்றம்சாட்ட, இஸ்ரேல் மறுப்பு தெரிவிக்கவில்லை.

What is hezbollas walkie talkie explosion? How they exploded it in Lebanon ? Rya
Author
First Published Sep 20, 2024, 3:48 PM IST | Last Updated Sep 20, 2024, 4:25 PM IST

லெபனான் நாட்டில் கடந்த செவ்வாய் கிழமை ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய பேஜர்கள் ஒரே நாளில் வெடித்து சிதறியது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். இதற்கு அடுத்த நாளே ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுஹ்த்டிய வாக்கி டாக்கிகளும் வெடித்து சிதறியது. இந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்ததுடன், 450 பேர் காயமடைந்தனர். இந்த டிவைஸ் வெடிப்பு சம்பவங்களில் இதுவரை 2 குழந்தைகள் உட்பட 32 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 3000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதனால் லெபனானில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. ஹிஸ்புல்லா உறுப்பினர்களால் பயன்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான பேஜர்களை குறிவைத்து வெளிப்படையாக நடத்தப்பட்ட தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த டிவைஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது. ஆனால் இஸ்ரேலிய அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த தாக்குதலில் வெடிக்கப்பட்ட சாதனங்கள் தைவான் மற்றும் ஹங்கேரியை தளமாக 2 நிறுவனங்கள் தயாரித்துள்ளன. ஆனால் இந்த இரண்டு நிறுவனங்களும் தாக்குதலுக்கு பொறுப்பேற்க மறுத்துள்ளன.  தைவான் அரசாங்கம் பேஜர்களின் வெவ்வேறு பகுதிகள் தைவானைச் சேர்ந்தவை அல்ல என்று தெரிவித்துள்ளது.

பொருளாதார அமைச்சர் குவோ ஜிஹ்-ஹூய் இதுகுறித்து பேசிய போது “ குறைந்த-இறுதி IC (ஒருங்கிணைந்த சுற்றுகள்) மற்றும் பேட்டரிகள், அவை தைவானில் தயாரிக்கப்படவில்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்" என்று தெரிவித்தார்.  வாக்கி-டாக்கிகளை தயாரிக்கும் ஜப்பானிய நிறுவனம் 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாடலை தயாரிப்பதை நிறுத்திவிட்டதாகக் கூறியது.

இந்த டிவைஸ் தாக்குதல்கள் எப்படி நடந்தன?

பேஜரில் இஸ்ரேலின் மொசாட் அமைப்பின் வெடிக்கும் போர்ட் என்ற சாதனை பொருத்தி உள்ளனர். அதில் 3 கிராம் அளவுக்கு வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பேஜர்கள் உற்பத்தி செய்யப்பட்ட இடத்திலேயே இந்த வெடிப்பொருள் நிரப்பட்டதாக கூறப்படுகிறது. பேஜர்களில் செய்தி வந்த உடன் வெடிக்கும் வகையில் இந்த சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. சுமார் 5000 பேஜர்களில் இந்த வெடிபொருள் சாதனம் பொருத்தப்பட்டுள்ளதாம்.

செவ்வாயன்று உள்ளூர் நேரப்படி மதியம் 3.30 மணியளவில் லெபனானின் தலைநகர் பெய்ரூட் உள்ளிட்ட பல பகுதிகளில் முதல் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அப்போது பேஜர்கள் வெடித்ததில் அவற்றை வைத்திருந்தவர்களின் பைகளில் இருந்து புகை வருவதை பார்த்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். 

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையிடமிருந்து வந்த செய்திகளை பேஜர்கள் பெற்றதாகவும் அதன்பின்னரே குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்த ஒரு மணி நேரத்திற்கு பிறகு பல இடங்களில் பேஜர்கள் வெடிக்க தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்ததால், லெபனான் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு  கொண்டு செல்லப்பட்டனர். 

இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்த அடுத்த நாளே, அதாவது புதன்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் மாலை 5 மணியளவில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. 5 மாதங்களுக்கு முன்பு ஹிஸ்புல்லா அமைப்பால் வாங்கப்பட்ட சாதனங்கள், வாக்கி-டாக்கிகள் வெடித்துச் சிதறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெய்ரூட்டில் செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலில் பலியானவர்களில் சிலருக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

புதன்கிழமை வாக்கி டாக்கிகள் வெடித்த போது, ஜப்பானிய நிறுவனமான ஐகாம் என்ற பிராண்டைக் கொண்ட சாதனங்கள் வெடித்து சிதறியது.. IC-V82 மாடல் என்றும் இது 2004 முதல் 2014 வரை மத்திய கிழக்கிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த மாடலின் உற்பத்தி 10 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டதாக ஐகாம் தெரிவித்துள்ளது. பேட்டரிகளின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.. புதன்கிழமை நடந்த தாக்குதல்களில் வெடித்த IC-V82 மாடல் வாக்கி டாக்கி நேரடியாக Icom நிறுவனத்திடம் இருந்து அனுப்பப்பட்டதா அல்லது விநியோகஸ்தர் வழியாக அனுப்பப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியாது என்று நிறுவனம் கூறுகிறது.

வெளிநாட்டு சந்தைகளுக்கான எந்தவொரு தயாரிப்புகளும் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு மட்டுமே விற்கப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது. ஆனால் செவ்வாயன்று வெடித்த பேஜர்களை ஹிஸ்புல்லா இதற்கு முன்பு பயன்படுத்தாத ஒரு புதிய பிராண்ட் என்று அந்த அமைப்பை சேர்ந்த ஒருவர் கூறினார். 

லெபனான் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது “ சுமார் 5,000 பேஜர்கள் சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.. வெடித்த பேஜர்களின் துண்டுகளில் காணப்படும் லேபிள்கள்  AR-924 என்ற பேஜர் மாதிரியை சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் அதன் தைவானிய உற்பத்தியாளரான கோல்ட் அப்பல்லோ நிறுவனம் குண்டுவெடிப்புகளுடன் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளது. 

பேஜர் தாக்குதலுக்கு என்ன காரணம்?

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் சிலர் பேசிய போது, பேஜர்களை ஒரே நேரத்தில் வெடிக்க வைப்பது ஹிஸ்புல்லாக்கு எதிரான "ஆல்-அவுட்" தாக்குதலின் தொடக்க நடவடிக்கையாக ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது என்று தெரிவித்தனர்.. ஆனால் இந்த திட்டம் பற்றி ஹிஸ்புல்லா அமைப்புக்கு தகவல் தெரிந்ததால் இஸ்ரேல் கவலை அடைந்தது. எனவே முன்கூட்டியே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெரிவித்தனர். 

இஸ்ரேலிய அதிகாரிகள் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை, ஆனால் பெரும்பாலான ஆய்வாளர்கள் தாக்குதலின் பின்னணியில் இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. ஹிஸ்புல்லாவின் தகவல் தொடர்பு வலையமைப்பில் இஸ்ரேல் ஆழமாக ஊடுருவியுள்ளதையே இந்தத் தாக்குதல் காட்டுவதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இந்த தாக்குதல்களுக்குப் பின்னால் இஸ்ரேல் இருப்பதாகக் குற்றம் சாட்டிய ஹிஸ்புல்லா அமைப்பு, பொதுமக்களையும் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த குற்றவியல் ஆக்கிரமிப்புக்கு இஸ்ரேல் தான் முழுப் பொறுப்பு என்று தெரிவித்துள்ளது. 

ஹிஸ்புல்லா ஏன் பேஜர்களைப் பயன்படுத்துகிறது?

இஸ்ரேல் தங்கள் இருப்பிடங்களை கண்காணிக்கக் கூடாது என்பதற்காகவே ஹிஸ்புல்லா அமைப்பினர் பேஜர்களை பயன்படுத்துகின்றனர். அந்த அமைப்பு ஒரு குறைந்த-தொழில்நுட்ப தகவல்தொடர்பு பெரிதும் நம்பியுள்ளது. பேஜர்கள் என்பது வயர்லெஸ் தொலைத்தொடர்பு சாதனங்கள் ஆகும், அவை எண்ணெழுத்து அல்லது குரல் செய்திகளைப் பெற்று காண்பிக்கும். மேலும் மொபைல் போன்களை போல பேஜர்களை எளிதாக ட்ராக் செய்ய முடியாது. 

செவ்வாய்கிழமை நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் இருவர் இரண்டு ஹிஸ்புல்லா எம்.பி.க்களின் மகன்கள் என்று ஹெஸ்புல்லாவுக்கு நெருக்கமான வட்டாரம் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். ஹிஸ்புல்லா உறுப்பினர் ஒருவரின் மகள் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் லெபனானுக்கான ஈரான் தூதர் மொஜ்தபா அமானியும் அடங்குவார். எனினும் அவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டதாக ஈரானிய ஊடகங்களில் செய்திகள் தெரிவிக்கின்றன. ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா குண்டுவெடிப்புகளில் காயமடையவில்லை என்று ராய்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளன. லெபனானின் அண்டை நாடான சிரியாவிலும் இதேபோன்ற குண்டுவெடிப்புகளில் 14 பேர் காயமடைந்துள்ளனர் என்று பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 

ஹிஸ்புல்லா-இஸ்ரேல் மோதல் அதிகரிக்குமா?

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை நீடித்து வரும் நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் மிகப்பெரிய தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் போரை தீவிரப்படுத்தி உள்ளது. ஆனால் இந்த போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் ஈரான் வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஈரானின் கோரிக்கையை இஸ்ரேல் ஏற்கவில்லை. இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து வரும் லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பின் மூலம் ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. 

ஹிஸ்புல்லா தற்போது இஸ்ரேலின் பரம எதிரியான ஈரானுடன் கூட்டணி வைத்துள்ளது இஸ்ரேலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இஸ்ரேலின் வடக்கு எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்பு அடிக்கடி ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை பரிமாறி வருகிறது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை நாட்டின் வடக்குப் பகுதிக்கு வசிப்பவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்த பிறகு இந்த டிவைஸ் தாக்குதல்கள் நடந்துள்ளன. 

புதன்கிழமை இஸ்ரேலிய விமானத் தளத்திற்குச் சென்றபோது, பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant, இதுகுறித்து பேசினார். அப்போது இஸ்ரேல் போரில் ஒரு புதிய கட்டத்தைத் தொடங்கி உள்ளது” என்று கூறினார். தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தாலும், இது வரை இரு தரப்பும் முழு அளவிலான போரில் எல்லையை கடக்காமல் பகைமையை கட்டுப்படுத்துவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்ததாக சர்வதேச அரசியல் கூறுகின்றனர். ஆனால் நிலைமை கட்டுக்கடங்காமல் போகலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

மற்ற நாடுகளில் பேஜர்களுக்கு தடை :

இந்த சம்பவத்திற்குப் பிறகு சில நாடுகள் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளை தடை செய்தன. பெய்ரூட் ராஃபிக் ஹரிரி சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BEY) பயணிக்கும் அனைத்து பயணிகளும் பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகளை விமானங்களில் கொண்டு வருவதற்கு கத்தார் ஏர்வேஸ் தடை விதித்துள்ளது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios