புடினுக்கு எதிராக கிளர்ச்சி செய்த, வாக்னர் குழு தலைவர் ரஷ்ய விமான விபத்தில் மரணம்? உண்மை என்ன?

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக சதிப்புரட்சிக்கு தலைமை தாங்கிய வாக்னர் கூலிப்படையின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Wagner chief who rebelled against putin died amont 10 people in russia plane crash

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக சதிப்புரட்சிக்கு தலைமை தாங்கிய வாக்னர் கூலிப்படையின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்துவிட்டதாக ரஷ்ய சிவில் ஏவியேஷன் அமைப்பான ரோசாவியாட்சியா தெரிவித்துள்ளது. விமானத்தில் இருந்த பயணிகளின் பட்டியலில் யெவ்ஜெனி ப்ரிகோஜின் இருந்ததாக ரஷ்ய சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. 

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று பணியாளர்கள் உட்பட விமானத்தில் இருந்த 10 பேரும் விபத்தில் உயிரிழந்ததாக ரஷ்யாவின் அவசர அமைச்சகம் கூறியதாக ரஷ்ய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த விமான விபத்தில் பயணிகளில் எவ்ஜெனி ப்ரிகோஜின் என்ற பெயருடன் ஒரு நபர் இருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். 2014-ம் ஆண்டில் வாக்னர் குழுவை நிறுவிய மூத்த வாக்னர் கமாண்டர் டிமிட்ரி உட்கினும் பயணிகள் பட்டியலில் இருந்தார் என்றும் அதிகாரிகள் கூறினர்.

ரஷ்யாவின் சிவிலியன் ஏவியேஷன் ஒழுங்குமுறை ஆணையமான, ரோசாவியாட்சியா, ப்ரிகோஜின் பயணிகள் பட்டியலில் இருப்பதாக தெரிவித்துள்ளது. ட்வெர் பகுதியில் இன்று இரவு நிகழ்ந்த எம்ப்ரேயர் விமான விபத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் விமானத்தில் ஏறினாரா என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் எவ்ஜெனி ப்ரிகோஜினின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டதாக என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. 10 உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான இன்டர்ஃபாக்ஸ் தெரிவித்துள்ளது.

முன்னதாக, வாக்னர் குழுவுடன் தொடர்புடைய டெலிகிராம் சேனல் கிரே சோன், மாஸ்கோவின் வடக்கே உள்ள ட்வெர் பகுதியில், ரஷ்ய பாதுகாப்பு துறையால் ஜெட் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பிபிசி தெரிவித்துள்ளது.

மூத்த ரஷ்ய ஜெனரல் செர்ஜி சுரோவிகின் விமானப்படைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்ட அதே நாளில் இந்த விபத்து நடந்துள்ளது. ஜெனரல் செர்ஜி சுரோவிகின் எவ்ஜெனி ப்ரிகோஜினுடன் நல்ல உறவைக் கொண்டிருந்தார் என்றும் ஆனால் புடினுக்கு கலகத்திற்குப் பிறகு பொது வெளியில் காணப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வாக்னர் குழு என்பது, ஆயிரக்கணக்கான வீரர்களை கொண்ட ஒரு தனியார் இராணுவ அமைப்பாகும். வாக்னர் கூலிப்படை குழுவில் சுமார் 25,000 வீரர்கள் உள்ளனர். இந்த குழு உக்ரைன், சிரியா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் செயல்பட்டு வருகிறது. வாக்னர் குழுவின் படைகள் உக்ரைன் போரில் முக்கிய பங்கு வகித்தது. ரஷ்யா - உக்ரைன் போர் உச்சத்தில் இருந்த போது, பக்முத் நகரை கைப்பற்றுவதில் வாக்னர் குழுவினர் வெற்றி பெற்றனர். இருப்பினும், அக்குழுவின் தலைவர் பிரிகோஜின் அதிகளவில் ரஷ்ய இராணுவத் தலைவர்களால் விமர்சிக்கப்பட்டார்.

வாக்னர் குழுவுக்கும் ரஷ்யாவின் இராணுவத் தலைமைக்கும் இடையே பல மாதங்களாக மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாத இறுதியில், வாக்னர் கூலிப்படையினர் ஆயுதமேந்திய கிளர்ச்சியை அறிவித்து மாஸ்கோ நோக்கி அணிவகுத்து சென்றனர். ரஷ்யாவின் ராணுவ தலைமையை மாற்ற வேண்டும் என்று கோரி அவர் இந்த கிளர்ச்சியை அறிவித்தார். பிரிகோஜினின் இந்த கிளர்ச்சி, புடின் ஆட்சிக்கு கடந்த 23 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகவும் கடுமையான அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டது. இதை தொடர்ந்து பெலாரஸ் அதிபரின் சமரச முயற்சியால், தனது அணிவகுப்பை நிறுத்திய ப்ரிகோஜின், தனது படையுடன் தங்கள் தளத்திற்கே திரும்பினார். இதனால் ரஷ்யாவில் நீடித்த பதற்றம் தணிந்தது.

இதனிடையே நாட்டு மக்களிடம் உரையாற்றிய அதிபர் புடின், ப்ரிகோஜினை துரோகி என்று முத்திரை குத்தியதுடன், முதுகில் குத்தியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று உறுதி அளித்தார். ஆனாலும் கிளர்ச்சிக் குற்றச்சாட்டில் கூலிப்படைத் தலைவருக்கு எதிரான கிரிமினல் வழக்கு பின்னர் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios