தைவானின் கீலுங் அருங்காட்சியகத்தில், 40 ஆண்டுகளாகப் படிந்த தூசியில் வரையப்பட்ட விலைமதிப்பற்ற கலைப்படைப்பை, தன்னார்வலர் ஒருவர் அழுக்கு என நினைத்து டாய்லெட் பேப்பரால் துடைத்து அழித்துள்ளார்.

சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்கும் பழக்கம் நல்லதுதான். ஆனால், தைவானின் கீலுங் அருங்காட்சியகத்தில் (Keelung Museum of Art) நடந்த சம்பவம், சுத்தம் செய்யும் முயற்சியால் ஏற்பட்ட விபரீதத்தை வெளிப்படுத்தியுள்ளது.

அங்கிருந்த ஒரு தன்னார்வலர், தவறுதலாக விலைமதிப்பற்ற கலைப்படைப்பு ஒன்றை டாய்லெட் பேப்பர் கொண்டு சுத்தம் செய்து அழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துடைக்கப்பட்ட 40 ஆண்டுகால ‘தூசி’

சின் சுங்-சிஹ் (Chen Sung-chih) என்பவரால் உருவாக்கப்பட்ட, "இன்வெர்டெட் சின்டாக்ஸ்-16" என்ற ஓவியம், ஒரு கண்ணாடியின் மேற்பரப்பில் 40 ஆண்டுகளாகப் படிந்த தூசியின் மீது வரையப்பட்ட அபூர்வமான கலைப்படைப்பு. இது கட்டுமானப் பொருட்கள் மற்றும் அன்றாடப் பொருட்களிலிருந்து உருவாக்கப்பட்ட படைப்புகளைக் காட்சிப்படுத்தும் "வி ஆர் மீ" (We Are Me) கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.

அருங்காட்சியகத்தில் பணியாற்றிய ஒரு தன்னார்வலர், கண்ணாடியின் மீதிருந்த தூசியை அழுக்கு என்று தவறாக நினைத்து, அதை டாய்லெட் பேப்பர் மூலம் துடைத்துவிட்டார். இந்தச் செயலால், 40 ஆண்டுகாலத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்ட தூசி ஓவியம் முற்றிலும் அழிந்துவிட்டது.

இந்தச் சம்பவம் குறித்துக் கலைஞர் சென் சுங்-சிஹ்-யிடம் அருங்காட்சியக நிர்வாகம் மன்னிப்புக் கோரியதோடு, அவருக்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்தும் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.