ஸ்பெயினில் கண்காட்சிக்காகக் கொண்டு செல்லப்பட்டபோது காணாமல் போன, உலகப் புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிகாசோவின் 'ஸ்டில் லைஃப் வித் கிட்டார்' என்ற அரிய ஓவியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் கண்காட்சிக்காகக் கொண்டு செல்லப்பட்டபோது மாயமான, உலகப் புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிகாசோவின் அரிய ஓவியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்பெயின் காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

'ஸ்டில் லைஃப் வித் கிட்டார்' (Still Life with Guitar) எனப்படும் 1919-ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்த ஓவியம், கோவாச் (Gouache) மற்றும் பென்சில் மூலம் வரையப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 600,000 யூரோக்கள் ஆகும். இது இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ. 5.4 கோடி (தோராயமாக) ஆகும்.

மாட்ரிட்டில் உள்ள ஒரு தனியார் சேகரிப்பாளருக்குச் சொந்தமான இந்த ஓவியம், கிரெனடாவில் உள்ள கஜாக்ரெனடா ஃபவுண்டேஷன் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுவதற்கு மாட்ரிட்டில் இருந்து போக்குவரத்து லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது.

Scroll to load tweet…

ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

அக்டோபர் 6-ஆம் தேதி லாரியில் கொண்டு வரப்பட்ட பொருட்கள் பிரித்துப் பார்க்கப்பட்டபோது, பிகாசோவின் ஓவியம் காணாமல் போனது தெரியவந்தது. காணாமல் போன ஓவியம் குறித்துக் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மாயமான ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் காவல்துறை வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது. இருப்பினும், ஓவியம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது என்ற விவரத்தைக் காவல்துறை வெளியிடவில்லை.

தேசியக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆரம்ப விசாரணையில், ஓவியம் போக்குவரத்து லாரியில் ஏற்றப்படவே இல்லை என்று தெரிய வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ஓவியத்தின் பெட்டியை அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்யும் புகைப்படங்களையும் காவல்துறை வெளியிட்டுள்ளது.

கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுமா?

அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 11-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில், மீட்கப்பட்ட 'ஸ்டில் லைஃப் வித் கிட்டார்' ஓவியம் காட்சிக்கு வைக்கப்படும் என்று ஃபவுண்டேஷன் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஸ்பெயினின் மாலகாவில் 1881-ல் பிறந்து, 1973-ல் மறைந்த பிகாசோ, 20-ஆம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க கலைஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது படைப்புகள் அவற்றின் அதிக மதிப்பு காரணமாகத் திருடர்களால் அடிக்கடி குறிவைக்கப்படுகின்றன. சமீபத்தில் இவரது இரண்டு ஓவியங்கள் ஏலத்தில் 140 மில்லியன் டாலருக்கும் (சுமார் ரூ. 1162 கோடி) அதிகமாக விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, 1976-இல் பிரான்சில் உள்ள பாலேஸ் டெஸ் பேப்ஸ் (Palais des Papes) என்ற இடத்திலிருந்து பிகாசோவின் 100-க்கும் மேற்பட்ட படைப்புகள் திருடப்பட்டன. எனினும், அந்தப் படைப்புகள் அனைத்தும் பின்னர் மீட்கப்பட்டன.