டிரம்பின் பம்மாத்துக்கு பணிய மாட்டோம்.. அமெரிக்காவை தெறிக்கவிடும் ரஷ்ய அதிபர் புடின்!
உக்ரைன் போர் காரணமாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளார். இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்த ரஷ்ய அதிபர் புடின், ரஷ்யா யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணியாது என்று கூறியுள்ளார்.
ரஷ்யா ஒருபோதும் அடிபணியாது!
உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கான முயற்சிகளில் பலன் கிடைக்காத விரக்தியில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்யாவின் இரண்டு மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் விதித்த முதல் தடை
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, ரஷ்யாவுடன் உறவுகளை மேம்படுத்த முயற்சித்தார். அந்நாட்டு அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசி நட்புறவை வளர்க்க முயன்றாலும், உக்ரைன் போரை நிறுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்குப் புதின் உடன்படவில்லை.
இந்நிலையில், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் விரக்தியடைந்த டிரம்ப், ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லுக்கோயில் (Lukoil) ஆகியவற்றின் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளார். உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 6 சதவீத பங்கைக் கொண்டுள்ள இந்நிறுவனங்கள், ரஷ்ய அரசுக்கு மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக உள்ளன. ரஷ்யாவுக்கு எதிராக டிரம்ப் எடுத்த முதல் பெரிய நடவடிக்கை இதுவாகும்.
அமெரிக்காவுக்கு புடின் பதிலடி
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்துப் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், "ரஷ்யா மீதான இந்தத் தடைகள் நட்பற்ற செயல் ஆகும். இது நிச்சயமாக ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கும் முயற்சிதான். இவை சில விளைவுகளை ஏற்படுத்தினாலும், எங்கள் பொருளாதாரம் பாதிக்கப்படும் அளவுக்கு இருக்காது. இந்தத் தடைகள் நீண்ட காலம் நீடிக்காது என்று நம்புகிறோம்" என்று கூறினார்.
மேலும் அவர், "அமெரிக்கா அல்லது வேறு எந்த நாட்டின் அழுத்தத்திற்கும் ரஷ்யா ஒருபோதும் அடிபணியாது. சுயமரியாதை கொண்ட நாடும், மக்களும் அழுத்தத்திற்காக எதையும் முடிவு செய்ய மாட்டார்கள். ரஷ்யாவின் எரிசக்தித் துறை நம்பிக்கையுடன் உள்ளது" என்று ஆணித்தரமாகக் கூறினார்.
டோமோ ஹாக் ஏவுகணை
போர் குறித்த நிலைப்பாடு பற்றிப் பேசிய புதின், "போரை விடப் பேச்சுவார்த்தை எப்போதும் சிறந்தது. போர் தீர்க்கப்படும் என்று நம்புகிறோம்" என்று குறிப்பிட்டார்.
அதே சமயம், "அமெரிக்காவிடம் இருந்து உக்ரைன் வாங்கிய டோமோ ஹாக் (Tomahawk) ஏவுகணைகளைப் பயன்படுத்தினால், அதற்கான பதிலடி கடுமையாக இருக்கும்" என்றும் புதின் எச்சரிக்கை விடுத்தார்.
டிரம்பின் இந்தப் புதிய தடைகள் குறித்து, இந்தியா மற்றும் சீனா போன்ற ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் வாங்குபவர்கள் தங்கள் இறக்குமதியை மறுபரிசீலனை செய்யக்கூடும் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.