போர் நமக்கு வேண்டாம்,ப்ளீஸ்.. விட்டு விடுங்கள் புடின் !" ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வெளியிட்ட 'வைரல்' வீடியோ !!
உக்ரைனில் மக்கள் தஞ்சம் அடைந்துள்ள பள்ளிகள், திரையரங்குகள் மற்றும் சமூக மையங்களை குறி வைத்து ரஷிய படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
மக்கள் மீது தாக்குதல் :
மரியுபோல் நகரில் உள்ள திரையரங்கம் மற்றும் நீச்சல் குள வளாகம் மீது ரஷியப் படைகள் குண்டு வீசி தாக்கியதாக , அந்நகர உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. அங்கு பொதுமக்கள் தஞ்சம் அடைந்திருந்ததாக கூறப்படுகிறது. அதில் பலர் குழந்தைகள். ரஷிய தாக்குதலில் அந்த கட்டிடம் பலத்த சேதம் அடைந்தது.
1,000 பேர் வரை அந்த கட்டிடத்திற்குள் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. உயிர் பிழைத்தவர்களைக் காப்பாற்ற மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதேபோல் கிழக்கு உக்ரைன் நகரமான மெரேஃபாவில் ரஷிய படைகள் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 25 பேர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அர்னால்ட் வெளியிட்டுள்ள வீடியோ :
உக்ரைன் மீது தொடுத்துள்ள போரை நிறுத்த வேண்டும் என்று ரஷிய அதிபர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு ஹாலிவுட் மூத்த நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'எனது அன்பான ரஷிய நண்பர்கள் மற்றும் உக்ரைனில் பணியாற்றும் ரஷிய வீரர்களுக்கு சென்று அடையும் வகையில் இந்த செய்தியை அனுப்புகிறேன்.
உலகில் நடக்கும் விஷயங்கள் உங்களிடமிருந்து மறைக்கப்பட்டவை, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயங்கரமான விஷயங்கள் இருப்பதால், நான் உங்களிடம் பேசுகிறேன். உக்ரைனில் நடக்கும் போரைப் பற்றிய உண்மையை நான் உங்களுக்குச் சொல்கிறேன். ரஷியா படையெடுப்பு 141 நாடுகளால் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல கட்டிடங்கள் குண்டுவீசித் தாக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ரஷிய வீரர்கள் இறந்துள்ளனர்.
உங்களுக்கு உண்மை தெரியும் :
உக்ரைனில் ரஷியாவின் நடவடிக்கைகளால் உலகமே ரஷியாவுக்கு எதிராக திரும்பியுள்ளது. அப்பாவி பொதுமக்கள் மீது ரஷியா குண்டு மழை பொழிவது, உலகை சீற்றம் அடையச் செய்துள்ளது. உலகப் பொருளாதாரத் தடைகள் உங்கள் நாட்டின் மீது சுமத்தப்பட்டுள்ளன. இது உங்கள் தாத்தா அல்லது உங்கள் பெரியப்பா போராடியது போல ரஷியாவைக் காப்பதற்கான போர் அல்ல.இது சட்டவிரோதமான போர். இந்த ஒளிபரப்பைக் கேட்கும் ரஷ்ய வீரர்களுக்கு, நான் பேசும் உண்மை தெரியும். நீங்கள் அதை உங்கள் கண்களில் பார்த்திருக்கிறீர்கள்’ என்று கூறியுள்ளார்.