வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏழு சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்த ராணுவ அத்துமீறலுக்கு அமெரிக்காவே காரணம் என வெனிசுலா அரசு அதிகாரபூர்வமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
வெனிசுலா நாட்டின் தலைநகரான கராகஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலையில் அடுத்தடுத்து ஏழு சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இந்தத் தாக்குதல்களை அமெரிக்காவே முன்னெடுத்ததாக வெனிசுலா அரசு அதிகாரபூர்வமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
அதிகாலையில் தாக்குதல்
தலைநகர் கராகஸ், மிராண்டா, அரகுவா மற்றும் லா குவைரா ஆகிய மாநிலங்களில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் பொதுமக்கள் வாழும் பகுதிகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அதிகாலை வேளையில் வானத்தில் விமானங்கள் தாழ்வாகப் பறந்ததைக் கண்டதாகவும், நிலமே அதிரும் வகையில் பெரும் சத்தத்துடன் வெடிப்புகள் நிகழ்ந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
"பூமியே குலுங்கியது, அது மிகவும் பயங்கரமாக இருந்தது. வெடிப்புச் சத்தங்களையும் போர் விமானங்கள் பறக்கும் சத்தத்தையும் எங்களால் கேட்க முடிந்தது" என்று கராகஸில் வசிக்கும் 21 வயது கார்மென் ஹிடல்கோ தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவின் கண்டனம்
இந்தத் தாக்குதல் கடுமையான ராணுவ அத்துமீறல் என்று வெனிசுலா அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச சமூகத்தன் கவனத்தை ஈக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், "இந்தத் தாக்குதல் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை (Articles 1 & 2) மீறும் செயலாகும். ஒரு நாட்டின் இறையாண்மையை மதிக்காமல் நடத்தப்பட்ட இந்த அக்கிரமம், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது” என வெனிசுலா அரசு முறையிட்டுள்ளது.
அமெரிக்கா - வெனிசுலா மோதல்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ இடையே நீண்டகாலமாகவே மோதல் நிலவி வருகிறது.
மதுரோவின் அரசாங்கம் ஒரு 'நார்கோ-தீவிரவாத' (Narco-terrorist) ஆட்சி என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். வெனிசுலா தனது நாட்டு சிறைக்கைதிகளையும், குற்றவாளிகளையும் சட்டவிரோதமாக அமெரிக்க எல்லைக்குள் அனுப்புவதாகவும் டிரம்ப் சமீபத்தில் சாடியிருந்தார்.
வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்கா பல்வேறு தடைகளை விதித்துள்ளதுடன், அந்நாட்டின் கப்பல்களையும் கண்காணித்து வருகிறது.
அமெரிக்காவின் மௌனம்
வெனிசுலாவில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையோ பென்டகனோ இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ விளக்கமும் அளிக்கவில்லை.
இருப்பினும், போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தாங்கள் தயாராக இருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை நிக்கோலஸ் மதுரோ தெரிவித்திருந்தார். இந்நிலையில், திடீரென வெனிசுலா மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

