உக்ரைனும் அமெரிக்காவும் கனிம வளங்களை மேம்படுத்துவதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. இது உக்ரைனின் பொருளாதார மறுகட்டமைப்புக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உடன்படிக்கை லித்தியம், டைட்டானியம், யுரேனியம் போன்ற மதிப்புமிக்க கனிம வளங்களைப் பயன்படுத்திக்கொள்ள வழிவகுக்கும்.
உக்ரைனும் அமெரிக்காவும் உக்ரைனின் முக்கியமான கனிம வளங்களை கூட்டாக மேம்படுத்துவதற்கான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் பொருளாதார மறுகட்டமைப்பு மற்றும் மேற்கு நாடுகளுடனான நீண்டகால கூட்டுறவுக்கான முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்த உடன்படிக்கை ஏப்ரல் 30, 2025 அன்று வாஷிங்டனில் இறுதி செய்யப்பட்டது. ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உக்ரைன் தனது பொருளாதாரத்தின் முக்கிய துறைகளை மீண்டும் கட்டியெழுப்ப முயன்று வரும் நேரத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் புனரமைப்பு நிதியம்:
இந்த உடன்படிக்கையின் கீழ், போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதியத்திற்கு இரு நாடுகளும் சமமாக பங்களிக்கும். மேலும், இந்த ஒப்பந்தம் லித்தியம், டைட்டானியம், யுரேனியம் போன்ற மதிப்புமிக்க கனிம வளங்களைப் பயன்படுத்திக்கொண்டு, உக்ரைனில் முதலீடுகளை ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இயற்கை வளங்களின் உரிமை உக்ரைன் வசமே இருப்பதை இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது. அதே நேரத்தில் முதல் பத்து ஆண்டுகளுக்கான லாபம் நேரடியாக உக்ரைனின் பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பில் மறு முதலீடு செய்யப்படும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
50 மில்லியன் டாலர் தொகுப்பு:
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த 50 மில்லியன் டாலர் அமெரிக்க ராணுவ உதவித் தொகுப்பைத் தொடர்ந்து இந்தக் கனிம உடன்படிக்கை வந்துள்ளது. டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபரான பின்பு அமெரிக்கா அளித்துள்ள முதல் உதவி இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தொகுப்பு சிறியதாக இருந்தாலும், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து எதிர்த்து வரும் உக்ரைனுக்கு ராணுவ மற்றும் பொருளாதார ரீதியாக அமெரிக்கா அளித்துவரும் ஆதரவை உறுதிப்படுத்துகிறது.
பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் மற்றும் பொருளாதார அமைச்சர் யூலியா ஸ்விைரிடென்கோ உள்ளிட்ட உக்ரைன் தலைவர்கள் இந்த உடன்படிக்கையை வரவேற்றுள்ளனர். இது உக்ரைனுக்கு எந்தக் கடன் சுமையையும் ஏற்படுத்தாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இது ஜனநாயக விழுமியங்களையும் பரஸ்பர பொருளாதார நலன்களையும் பிரதிபலிக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
எச்சரிக்கும் நிபுணர்கள்:
இந்த உடன்படிக்கைக்கான பாராட்டுக்கள் இருந்தபோதிலும், சில நிபுணர்கள் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இருக்குமா என்று எச்சரிக்கின்றனர். இந்த உடன்படிக்கை மேற்கத்திய நாடுகளுடன் ஆழமான ஒத்துழைப்பை நோக்கி உக்ரைன் நகர்ந்திருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.


