ஏமன் மீதான வான்வழித் தாக்குதல் தகவல் கசிவு தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ராஜினாமா செய்ய உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வால்ட்ஸ் மட்டுமின்றி அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் அலெக்ஸ் வோங்கும் பதவிவிலகத் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏமன் மீதான வான்வழித் தாக்குதல்கள் குறித்து அதிகாரிகளுக்கு இடையேயான உரையாடலில் ஒரு பத்திரிகையாளர் தற்செயலாக சேர்க்கப்பட்டதாக எழுத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வால்ட்ஸ் மட்டுமின்றி அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் அலெக்ஸ் வோங்கும் பதவிவிலகத் தயாராக இருப்பதாக சிபிஎஸ் செய்தி வெளியிட்டுள்ளது, அதே நேரத்தில் டிரம்ப் விரைவில் இந்த விஷயத்தில் கருத்து தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஃபாக்ஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.
முதல் முறையாக விலகும் அதிகாரி:
டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபரான பிறகு, அவரது நிர்வாகத்தில் இருந்து முக்கிய அதிகாரி ஒருவர் வெளியேறுவது இதுவே முதல் முறையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் இந்த அறிக்கைகளை உறுதிப்படுத்தவில்லை. "எந்த அறிவிப்பையும் முன்கூட்டியே தெரிவிக்க விரும்பவில்லை" என்று அவர் கூறினார்.
சிக்னல் செயலியில் அமெரிக்க அதிகாரிகள் அடங்கிய ரகசிய உரையாடலுக்கான குழுவில் தி அட்லாண்டிக்கின் தலைமை ஆசிரியர் ஜெஃப்ரி கோல்ட்பெர்க்கை மைக் வால்ட்ஸ் சேர்த்துவிட்டார். இது வால்ட்ஸ் கவனக்குறைவாகச் செய்த தவறுதான் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்தத் தகவல் கசிவு நடந்த சில வாரங்களுக்குள் மீண்டும் ஏமன் தாக்குதல் பற்றிய தகவல்கள் மீண்டும் கசியவிடப்பட்டது.
சிக்னல் செயலியில் தகவல் கசிவு:
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தனது மனைவி ஜெனிஃபர், பத்திரிகையாளரும் முன்னாள் ஃபாக்ஸ் நியூஸ் தயாரிப்பாளருமான, அவரது சகோதரர் பில், வழக்கறிஞர் டிம் பர்லாடோர் ஆகியோருடன் ஏமன் மீதான தாக்குதல் குறித்த ரகசியத் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
ஏமனில் உள்ள இலக்குகளை குண்டுவீச அமெரிக்க போர் விமானங்கள் புறப்படும் நேரங்கள் உட்பட தாக்குதல் திட்டத்தை பற்றிய தகவல்கள் வெளியில் கசிந்தன. அடுத்தடுத்த நடந்த ராணுவ ரகசியக் கசிவு காரணமாக, பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்தும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்.


