சீனா-இந்தியாவை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், அமெரிக்க-இந்திய உறவு மிகவும் முக்கியமானது என அமெரிக்காவின் இரண்டு  சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான, இருதரப்பு உறவின் அவசியம் குறித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு குழுவின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான மைக்கேல்  டி. மெக்கால்  இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம்  ஒன்று எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது:- 21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா இந்தியா இடையேயான உறவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்து அமெரிக்காவின் இரு கட்சி உறுப்பினர்களும் புரிந்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு துவக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல் இரு நாடுகளின் உறவை இனி வெறும் கூட்டாண்மை அல்ல அவை முன்னெப்போதுமில்லாத அளவிற்கு வலுவானவை, நெருக்கமானவை.

இதை அமெரிக்காவும் நன்கு புரிந்து கொண்டுள்ளது, இந்திய எல்லையில் சீனாவில் ஆக்ரோஷமான ஆக்கிரமிப்பை இந்தியா எதிர்கொள்ளும் இந்நேரத்தில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வலுவான உறவு என்பது மிகவும் முக்கியமானது. சீனாவின் இந்த நடத்தை இந்திய பசிபிக் பகுதியில் சீன அரசாங்கத்தின் சட்ட விரோத நடவடிக்கைகள் மற்றும் ஆக்கிரமிப்பின் ஒரு பகுதியாகும். இந்நிலையில் அமெரிக்கா-இந்தியா ஆகிய இரு தரப்பு உறவுகளுக்கு எங்கள் ஆதரவுகளை வழங்குகிறோம். அதேபோல் ஜம்மு காஷ்மீரின் 370ஆவது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டு, அதை யூனியன் பிரதேசமாக மாற்றிய பின்னர், கடந்த ஒரு வருட காலமாக நிலைமை இயல்பானதாக இல்லை  என்பது குறித்த எங்கள் ஆழ்ந்த கவலையையும் தெரிவிக்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது. 

ஜூன் 15 அன்று கிழக்கு லடாக் பள்ளத்தாக்கில் சீனத் துறுப்புகளுடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்த வன்முறை மோதலில் சீன தரப்பினரும் கணிசமான இழப்பைச் சந்தித்தனர். இருப்பினும் சீன தரப்பில் எத்தனே பேர் உயிரிழந்தனர் என்பது குறித்த தகவல் வழங்கப்படவில்லை. அமெரிக்க உளவுத்துறை அறிக்கையின்படி சீன தரப்பில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே இந்த நெருக்கடியான நேரத்தில் இந்திய இறையாண்மை, மற்றும் அதன் பாதுகாபப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அமெரிக்கா இந்தியாவுக்கு துணை நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.  இந்த இக்கட்டான நிலையில் இரு நாடுகளின் உறவு மிகவும் முக்கியமானது என அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.